Published : 07 Apr 2015 10:59 AM
Last Updated : 07 Apr 2015 10:59 AM

மாஞ்சா கயிறு பட்டங்களுக்கு தடை: அரசு 2 மாதங்களில் அறிக்கை தரவேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் மாஞ்சா கயிறு மூலம் பட்டம் விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எதிர்காலத்தில் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்து 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஆர்.கோபிகா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

மாஞ்சா கயிற்றில் பட்டம் விட்ட தால் 4 வயது பெண் குழந்தை கழுத்து அறுபட்டு உயிரிழந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மாஞ்சா கயிற்றில் பட்டம் விடுவதால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

2007-ம் ஆண்டு வடசென்னையில் 2 வயது குழந்தை மாஞ்சா கயிறு அறுத்து பலியானது. அப்போது பட்டம் விடுவதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது.

பின்னர், மாஞ்சா கயிற்றில் பட்டம் விடுவதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டது.

ஆனால் அதிகாரிகளும், காவல்துறையினரும் இதை தீவிரமாக அமல்படுத்தவில்லை. இதனால், மாஞ்சா கயிற்றில் சிக்கி பலியாகும் சம்பவங்கள் தொடர்கின்றன. இதற்கு காரணமானவர்களுக்கு ரூ.250 அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை மட்டும் விதிக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள 200 வார்டிலும் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பட்டம் விட அனுமதிக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் பட்டம் விடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று 2011-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடம் மனு கொடுத்தேன்.

அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனுவில் குறிப்பிட்டுள்ள ஆலோசனையை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் நேற்று விசாரித்தனர். ‘‘இந்த வழக்கில் உள்துறை முதன்மைச் செயலாளர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவரும், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர் ஆகியோர் மாஞ்சா கயிற்றில் பட்டம் விடுவதைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட தடைச் சட்டம் எந்த அளவுக்கு அமல்படுத்தப்பட்டது என்பது பற்றியும் எதிர்காலத்தில் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் 2 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x