Published : 01 Apr 2015 08:05 AM
Last Updated : 01 Apr 2015 08:05 AM

திருத்தணியில் சிப்காட் வளாகம் அமைப்பது பற்றி அரசு பரிசீலிக்கும்: அமைச்சர் தங்கமணி உறுதி

திருத்தணி சட்டப்பேரவை தொகுதி யில் சிப்காட் தொழில் வளாகம் அமைப்பது பற்றி அரசு பரிசீலிக்கும் என்று தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, திருத்தணி தொகுதி உறுப்பினர் மு.அருண் சுப்பிரமணியன், ‘‘சிப்காட் தொழில் வளாகம் அமைப்பதற்கு தேவையான அளவுக்கு திருத்தணி தொகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. ஆகவே, திருத்தணி தொகுதியை தொழில் வளம் மிகுந்த பகுதியாக உருவாக்க அரசு ஆவன செய்யுமா?’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து அமைச்சர் தங்கமணி கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் 1,257 ஏக்கர் பரப்பில் 2 நிலைகளில் தொழிலக வளாகமும், 149 ஏக்கர் பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலமும் செயல்பட்டு வருகின்றன.

மேலும் தேர்வாய்கண்டிகை கிராமத்தில் 1,127 ஏக்கர் பரப்பளவில் தொழில் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்துமே திருத்தணி தொகுதியை தொழில்வளம் மிகுந்த பகுதியாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளே. எனினும், உறுப்பினர் அருண் சுப்பிரமணியன் கோருவதுபோல திருத்தணி தொகுதியில் சிப்காட் வளாகம் அமைப்பது பற்றி அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x