

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல் பட்டு ரயில் நிலையம் அருகேயுள்ள அரசு சிறுவர் இல்லத்தில், நேற்று முன்தினம் இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளிகள் இருவரைத் தாக்கிவிட்டு 9 சிறுவர்கள் தப்பியோடினர்.
போலீஸார் விரைவாக செயல்பட்டு தப்பி ஓடியவர்களில் 6 பேரை மடக்கினர். எஞ்சிய 3 பேரைப் பிடிக்க தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் அரசு சிறுவர் இல்லம் உள்ளது. 2008-ல் இருந்து செயல்பட்டு வரும் இந்த இல்லத்தில், சிறுவர்கள் 36 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிறுவர் இல்ல அறையின் இரும்புக் கதவுகளை சேதப்படுத்தி, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளிகள் முரளி, செந்தில் ஆகிய இருவரையும் தாக்கிவிட்டு சிறுவர்கள் 9 பேர் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அந்தக் காவலாளிகள், செங்கல்பட்டு தாலுகா போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து, செங்கல்பட்டு ஏஎஸ்பி ஜார்ஜீ ஜார்ஜ், சிறுவர் இல்லத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, போலீஸார் விரைந்து செயல்பட்டு, பரனூர் அருகேயுள்ள வனப் பகுதியில் சுற்றித் திரிந்த சிறுவர்கள் 5 பேரை அன்றிரவே மடக்கிப் பிடித்தனர். மேலும் ஒரு சிறுவனை நேற்று காலை பிடித்தனர். எஞ்சிய 3 சிறுவர்களையும் பிடிக்க தீவிர தேடுதலில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சிறுவர்களால் தாக்கப்பட்ட காவலாளிகள் இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
11 பணியிடங்கள் காலி
இந்த சிறுவர் இல்லத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்காக 5 காவலர் பணியிடங்கள் உள்ளன. இதில் 4 பணியிடங்கள் கடந்த 4 ஆண்டுகளாக காலியாக உள்ளன. மேலும், 3 வார்டன் மற்றும் 4 காவலாளி பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால், காவலாளிகள் இருவரையும் இரவு நேர கண்காணிப்புப் பணியில் வலுக்கட்டாயமாக ஈடுபட வைக்கின்றனராம்.
காவலாளிகள் இருவருக்கும் செவித்திறன் குறைபாடு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், சிறுவர் இல்லத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
பாதுகாப்பு குறைபாடு
போதிய பணியாளர்கள் இல்லாததால், சிறுவர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரங்களில் யாரும் பணியில் ஈடுபடுவதில்லை. மேலும், சிறுவர் இல்லத்தில் சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அறைகளில் இருபுறமும் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவை எளிதாக திறக்கும் வகையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தக் காரணங்களால் சிறுவர்கள் எளிதாக தப்பிவிட்டதாகத் தெரியவருகிறது.