

தமிழகத்தில் பாஜகவை வளர்க்க என்ன செய்யலாம் என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் பிரதமர் நரேந்திர மோடி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செவ்வாய்க்கிழமை (ஏப். 21) பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பு குறித்து ‘தி இந்து’விடம் தமிழிசை கூறியதாவது:
கட்சி வேலையாக நான் கிருஷ்ண கிரிக்கு சென்றிருந்தபோது பிரதமர் சந்திக்க விரும்புவதாக தகவல் கிடைத்தது. எனவே அங்கிருந்து உடனே டெல்லிக்கு சென்று அவரைச் சந்தித்தேன்.
அப்போது, தமிழகத்தின் அரசியல் நிலவரங்கள், தமிழக அரசின் செயல்பாடுகள், மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? கூட்டணி கட்சிகள் என்ன நினைக் கிறார்கள்? என பல்வேறு விஷயங் கள் குறித்து விவரங்களைக் கேட்டறிந்தார்.
ஆதார் அட்டை, சமையல் எரிவாயுவுக்கு நேரடி மானியம் வழங்குவதில் ஏற்பட்ட குழப்பங் கள், கால தாமதங்கள் குறித்து வருத்தத்துடன் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் ஆதார் அட்டைக் காக பொதுமக்கள் நீண்ட வரிசை யில் நிற்கிறார்களாமே என அவர் கேட்டது என்னை வியப்பில் ஆழ்த்தியது. தமிழகத்தில் நடக்கும் சிறிய விஷயங்கள் கூட அவருக்கு தெரிந்திருக்கிறது.
தமிழகத்தின் தேவைகள் என்ன? என்னென்ன திட்டங்களை செயல்படுத்தினால் மக்களுக்கு பயன்படும்? இங்கு பாஜகவின் வளர்ச்சி எப்படி உள்ளது? முக்கிய கட்சியாக பாஜக வளர வேண்டுமானால் என்ன செய்ய லாம்? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் 35 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள் ளதை தெரிவித்தேன். பாராட்டு தெரிவித்தார். தண்ணீர் பிரச்சி னையை தீர்த்து வைத்துவிட்டால் தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்றுவிடலாம் என்றேன். அதற்கான திட்டங்களை தயாரித்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
மழை நீரை சேமிக்கும் வகையில் சிறிய செக் டேம்களைக் கட்டுவது, ஏரிகள், கால்வாய்கள், அணைகளை தூர்வாருவது குறித் தெல்லாம் விரிவாக விவாதித்தார்.
தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு செல்வாக்கு உள்ளது? மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்த அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? என ஒவ்வொரு கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு அவர் கேட்டது ஆச்சரியமளித்தது.
42 மத்திய அமைச்சர்கள்
தமிழகத்துக்கு வருமாறு நான் விடுத்த அழைப்பு ஏற்றுக்கொண் டார். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் வருவதாக உறுதி அளித்தார். அதுபோல கட்சியின் 42 மாவட்டங்களுக்கும் 42 மத்திய அமைச்சர்களை அனுப்புவதாகவும், எந்தெந்த மாவட்டங்களுக்கு எந்தெந்த துறையின் அமைச்சர் வந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பதற் கான பட்டியலை அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார் என்று தமிழிசை தெரிவித்தார்.