

காஞ்சிபுரம் அடுத்த காவாந்தண் டலம் கிராமத்தில் காலனி மக்கள் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவிக்கும் ஊராட்சிமன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் துக்கு மனு அளிக்க வந்த காவாந்தண்டலம் காலனி மக்கள் கூறியதாவது:
“காவாந்தண்டலம் கிராம காலனி பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத் தில் திருவிழா நடத்துவது வழக் கம். இந்த ஆண்டு திருவிழா நடத்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் கூடி விழா குழு வினரை தேர்வு செய்தோம். இப்பகுதியில் திருவிழா நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் மோசமான விளைவை சந்திக்க நேரிடும் என்று காவாந்தண்டலம் ஊராட்சிமன்றத் தலைவர் கே.கிருபாகரன் மிரட்டுகிறார்.
மேலும் எங்கள் பகுதியில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் பிரச்சினை உள்ளது. குடிநீர் பிரச் சினையை தீர்க்கக் கோரி கிருபாகரனிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறோம்” என்றனர்.
இது குறித்து ஊராட்சிமன்றத் தலைவர் கிருபாகரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
திருவிழா என்ற பெயரில் அவர்கள் வசூல் வேட்டை நடத்தி, வசூலான பணத்தை திருவிழா வுக்கு செலவிடாமல், சொந்த செலவுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். வசூல் வேட்டை நடத்த எதிர்ப்பு தெரிவித்தேன். அவர்கள் விழா நடத்த எதிர்ப்பு தெரிவிப்பதாக ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இக்கிராமத்தில் குடிநீர் பிரச்சினை இல்லை. அவர்கள் சட்டவிரோதமாக குடிநீர் விற்பனை செய்வதை தடுத்தேன். அதனால் அவதூறு புகார்களை ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர் என்றார்.