Published : 22 May 2014 12:00 AM
Last Updated : 22 May 2014 12:00 AM

பாஜக கூட்டணி முதல்வர் வேட்பாளருக்கு தமிழகத்தில் வைகோ தகுதியானவர்; விஜயகாந்த் கறைபடியாதவர் அல்ல: தமிழருவி மணியன் பேட்டி

பாஜக கூட்டணியில் தமிழக முதல்வர் வேட்பாளருக்கு வைகோ தான் தகுதியானவர். விஜயகாந்த் கறைபடியாதவர் என்று என்னால் சொல்ல முடியாது என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் நீங்கள் விரும்பிய பாஜக கூட்டணி அமைந்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லையே?

இலங்கைத் தமிழின அழிப்புக்கு உதவிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது, தமிழகத்தில் காங்கிரஸ் அழிக்கப்பட வேண்டும். திமுக, அதிமுகவிடமிருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்ற நோக்கத்துக்காக பாஜக கூட்டணிக்கு பாடுபட்டேன். இந்த இரண்டு நோக்கங்களும் நிறைவேறின. காங்கிரஸ் 37 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. திராவிடக் கட்சிகளில் ஒன்றை மக்களிடமிருந்து விலக்கி விட்டோம். இன்னொரு கட்சியான அதிமுகவுக்கு எதிராக கூட்டணி அமைத்து, 2016-ல் அதையும் படுதோல்வி அடைய வைப்போம்.

தமிழகத்தில் தற்போது பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள், 2016 தேர்தலிலும் இருக்குமா?

இருக்கும் என்று சொல்ல முடியாது. சில கட்சிகள் வரலாம், வெளியேறலாம். ஒரு உறையில் இரண்டு வாள்கள் இருக்க முடியாது. பாமகவும், தேமுதிகவும் அப்படித்தான். இரு கட்சிகளும் ஒருவரையொரு வர் வீழ்த்த உள்குத்து வேலைகளில் ஈடுபடுவர். இந்த இரண்டு கட்சிகளும் ஒரே அணியில் இனி இருக்க வாய்ப்பில்லை.

பொன்.ராதாகிருஷ்ணன், அன்புமணிக்கு மந்திரி பதவி கிடைக்குமா? வைகோ, சுதீஷ் ராஜ்யசபா எம்.பி. ஆவார்களா?

நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியான அதிமுகவுக்கு எதிராக பாஜகவை தமிழகத்தில் வளர்க்க வேண்டும் என்றால், தமிழக பாஜக உறுப்பினர்களுக்கு பிரதிநிதித்துவம் தர வேண்டும். பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கேபினட் பதவி கிடைக்கலாம். வைகோ, சுதீஷுக்கு பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் தெரியவில்லை.

விஜயகாந்த், தனது மைத்துனர் சுதீஷுக்கு மந்திரி பதவி கேட்டு அழுத்தம் கொடுத்தால், அதற்கு பாஜக அடிபணியும் என நான் நினைக்கவில்லை.

தமிழகத்தில் பாஜக அணியை உருவாக்கிய உங்களுக்கு மத்திய அரசில் பதவி கிடைக்கும் என்கிறார்களே?

அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால், அதை ஏற்கும் நிலையில் மணியன் இல்லை. அரசு சார்ந்த அதிகாரத்தில் இருக்க மாட்டேன் என்ற லட்சியத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

வைகோவைவிட விஜயகாந்தும் பிரேமலதாவும்தான் பிரச்சாரம் மூலம் பட்டி தொட்டியெங்கும், மோடியின் பெயரையும் தாமரை சின்னத்தையும் கொண்டு சேர்த்ததாக சொல்லப்படுகிறதே?

நிச்சயமாகத் தவறு. வைகோ தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். மோடியின் பெயரும் முகமும் ஊடகங்கள் மூலம், ஏற்கெனவே கிராமங்களை சேர்ந்துவிட்டது.

2016-ம் ஆண்டு தேர்தலில் பாஜக கூட்டணி தமிழக முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்து, பாஜகவுடன் தேமுதிகவை இணைக்கும் முயற்சி நடப்பதாக கூறப்படுகிறதே?

தமிழக மக்கள் பலன் பெற வேண்டுமென்றால், பாஜக கூட்டணி முதல்வர் வேட்பாளராக வைகோவையே அறிவிக்க வேண்டும். அவரது ஒழுக்கம், நேர்மை, நாணயத்தை யாரும் குறை சொல்ல முடியாது. அப்படிப்பட்ட கறைபடியாதவராக, களங்க மற்றவராக விஜயகாந்தைக் கூற முடியாது.

குஜராத் கலவர சர்ச்சையில் சிக்கிய மோடியின் பாஜக அரசு அனைத்து தரப்புக்கான அரசாக அமையுமா?

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அயோத்தி ராமர் கோயில், பாபர் மசூதி பிரச்சினை, காஷ்மீருக்கான 370-வது சிறப்புப் பிரிவு நீக்கம், பொது சிவில் சட்டம் கொண்டு வருதல் போன்ற மூன்று விஷயங்களை பாஜக விட்டுவிட வேண்டுமென்று மோடியிடமும் ராஜ்நாத் சிங்கிடமும் பேசியுள்ளோம். எனவே, பாஜக அரசு வளர்ச்சிப் பணிகளில்தான் கவனம் செலுத்தும். இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.

ராஜபக்சே வந்தால் எதிர்ப்போம்:

மோடி பிரதமர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வருகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழருவி மணியன், ‘‘ரத்தக்கறை படிந்த ராஜபக்‌சேவுக்கு பாஜக அரசு அப்படியொரு ரத்தினக்கம்பளம் விரிப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். எங்கள் எதிர்ப்பை கடுமையாக வெளிப்படுத்துவோம். மோடி மற்றும் ராஜ்நாத் சிங்குடன் ஏற்கனவே இதுகுறித்து பேசியுள்ளோம்’’ என்றார்.

ராஜபக்‌சேவின் நண்பர் சுஷ்மா சுவராஜுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி கிடைத்தால், வைகோவின் லட்சியமான தமிழீழம் கிடைக்குமா என கேட்டபோது, ‘‘எந்த அரசு வந்தாலும், இலங்கையை பகைத்துக் கொள்ள மாட்டார்கள். தமிழீழம் பெற்றுத் தர மாட்டார்கள். ஆனால், இலங்கை இன அழிப்புக்கு எதிராக தண்டனை அளிக்கும் பொது வாக்கெடுப்புக்கு, காங்கிரஸைப் போல் பாஜக அரசு, இலங்கைக்கு துணை நிற்காது’’ என்றார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x