

சீறார் நீதி சட்டத் திருத்தத்தை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இளங்குற்றவாளிகள் நீதி மசோதாவை மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளை மற்ற குற்றவாளிகளைப் போலவே விசாரிக்க இந்த மசோதா அனுமதிக்கிறது. இது தெரிந்தே நீதியை கைவிடுகிற முடிவாகும்.
அரசின் இந்த மசோதாவை பாஜக உறுப்பினர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு முழுமையாக ஆராய்ந்து 16 முதல் 18 வயதுக்குள் இருக்கும் சிறார்களை, வயது வந்தவர்களுக்கான குற்ற நடைமுறைச் சட்டத்துக்கு ஆளாக்குவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று கூறியுள்ளது.
எனவே, சிறார் நீதி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மத்திய அரசின் மசோதாவை இதேபோக்கில் அனுமதிக்கக் கூடாது. அறிவியல், நீதிநெறி மற்றும் நாடாளுமன்ற ஜனநாயக ரீதியாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வரம்புகளை கடந்து அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கனிமொழி கூறியுள்ளார்.