

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அரசு அமல்படுத்த வேண்டும் எனக் கோரி, ஆவடியில் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பு நிற புடவை அணிந்து பங்கேற்றனர்.
ஆவடி பெருநகராட்சி அலு வலகம் அருகில், ஈ. வெ.கி.சம்பத் தமிழ் தேசிய பேரவை சார்பில், தமிழகத்தில் மதுவிலக்கை அரசு அமல்படுத்த வேண்டும் எனக் கோரி, ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது.
இதில், காந்தியவாதி சசிபெரு மாள், ஈ.வெ.கி.சம்பத் தமிழ் தேசிய பேரவை மாநிலத் தலைவர் மன்னார்குடி சுதாகர், துணைத் தலைவர் ஆவடி கராத்தே பாபுராம், தமிழ்நாடு காமராஜ், சிவாஜி பொதுநல இயக்கத் தலைவர் குட்டம் சிவாஜி முத்துக்குமார், தமிழக காங்கிரஸின் முன்னாள் மாணவர் அணிச் செயலாளர் கவிஞர் ஜோதி ராமலிங்கம், சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவர் பி.வி.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் மற்றும் பெண்கள் என இருநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த கருத்துரைகள் மற்றும் மதுவை விற்கும் தமிழக அரசைக் கண்டித்து கண்டன உரைகளுடன் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இந்தப் போராட்டத்தில், ‘உத வும் கைகள்’ அமைப்பின் தலைவர் ஆனந்தி அம்மாள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தமிழகத்தில் அரசு மது விற்பனை செய்வதைக் கண்டிக்கும் வகையில், கருப்பு நிற புடவை அணிந்தும் சில பெண்கள், தங்கள் கழுத்தில் காலியான மது பாட்டில் களை மாலையாக அணிந்தும் பங்கேற்றனர். மேலும், சில பெண்கள், தலைவிரி கோலத் துடனும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.