

திருவாரூரில் கர்நாடக இசை மும்மூர்த்திகளுக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைத்து நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
காஞ்சி காமகோடி பீட சேவா சமிதி சார்பில் கர்நாடக இசை மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா திருவாரூர் தியாகராஜர் கோயில் வளாகத்தில் ஏப்.21-ல் தொடங்கி, ஏப்.26 (நேற்று) வரை நடை பெற்றது.
இதில், திருக்களார் துரைபாரதி தாசன் குழுவினரின் நாகசுரம், சீர்காழி ஜி.சிவசிதம்பரம் குழு வினரின் பாட்டு, யூ.ராஜேஷின் மாண்டலின், கே.கிருஷ்ண குமாரின் பாட்டு, திருவாரூர் பக்தவத்சலம் குழுவினரின் மிருதங்க இசை சங்கமம், ராஜேஷ் வைத்தியாவின் வீணை, ஷேக்மெகபூப் சுபானி, காலிஷாபி மெகபூப் குழுவினரின் நாகசுரம், எம்.சந்திரசேகரனின் வயலின், ஈஷா சம்ஸ்ச்ருதி மாணவிகள், மகதி, எஸ். செளமியாவின் பாட்டுக் கச்சேரிகள் நடைபெற்றன.
நேற்று காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் கே.செல்வகணபதி குழுவினரின் உஞ்சவிருத்தி பஜனை நடைபெற்றது. தொடர்ந்து அரசு இசைப் பள்ளி மாணவர் களின் தவில், நாகசுரம் நிகழ்ச்சி, கீழ்வேளூர் என்.ஜி.கணேசன், கல்யாணபுரம் கே.ஜி.சீனிவாசன், சின்னமனூர் ஏ.விஜய் கார்த்தி கேயன் ஆகியோரின் நாகசுரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை 9 மணி முதல் 10 மணி வரை சுமார் 200-க்கும் மேற் பட்ட இசைக் கலைஞர்கள் தியாக ராஜர் கோயில் வளாகத்தில் இரு வரிசைகளாக அமர்ந்து தியாக ராஜர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனை களை நாட்டை, கெளளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் ஆகிய ராகங்களில் இசைத்து மும்மூர்த்தி களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதில், விழா குழு நிர்வாகிகள் சுவாமிநாதன், பக்தவத்சலம், கனக ராஜ் மற்றும் இசைக் கலைஞர்கள், இசை ஆர்வலர்கள் திரளாக பங்கேற்றனர்.
தியாகராஜர் பிறந்த இல்லத்தில்
காஞ்சி காமகோடி பீட அறக் கட்டளை சார்பில் 31-வது ஆண்டாக, திருவாரூர் புதுத்தெரு வில் உள்ள தியாகராஜர் பிறந்த வீட்டில், நேற்று அவர் பிறந்த புனர்பூச நட்சத்திரத்தில் இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. இசைக் கலைஞர்கள் சம்பிரதாய உஞ்சவிருத்தி பாடல்கள் மற்றும் பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்து அஞ்சலி செலுத்தினர்.