Published : 04 Apr 2015 01:23 PM
Last Updated : 04 Apr 2015 01:23 PM

நிலம் கையகப்படுத்தல் அவசர சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

நாட்டின் உணவு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலம் கையகப்படுத்தல் அவசர சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை திருத்துவதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு மீண்டும் பிறப்பித்திருக்கிறது. இந்தியாவில் ஓர் அவசரச் சட்டம் இரண்டாவது முறையாக பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். நாட்டு நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு வாய்ப்பை உழவர்களின் நலனை பாதிக்கும் விஷயத்திற்காக 2-ஆவது முறையாக அரசு பயன்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

‘நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை - நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக முதன்முதலில் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டபோதே அதை கடுமையாக எதிர்த்தேன்.

இந்த அவசர சட்டத்திற்கு மாற்றான சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாத நிலையில், அதன் தீமைகளை விளக்கி, இந்த முயற்சியை மத்திய அரசு இத்துடன் விட வேண்டும்; இன்னொரு முறை அவசரச் சட்டத்தை பிறப்பிக்கக் கூடாது என்று கடந்த மார்ச் 30ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தினேன்.

மக்களின் விருப்பமும் இதுவாகவே இருந்தது. ஆனால், இதையெல்லாம் மதிக்காமல் அவசரச் சட்டத்தை பிறப்பித்ததன் மூலம் பெருநிறுவனங்களிடம் தனது விசுவாசத்தை அரசு மீண்டும் நிரூபித்திருக்கிறது.

மாநிலங்களவையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் இந்த சட்டத்தை மத்திய அரசால் நிறைவேற்ற முடியாது. இதனால் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தை கூட்டி இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்படும். அரிதிலும் அரிதாக பயன்படுத்த வேண்டிய வாய்ப்புக்களை விவசாயத்தை ஒழிக்கும் ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்த வேண்டுமா? என்று மத்திய அரசு சிந்திக்க வேண்டும். நாட்டின் உணவு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அவசரச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அல்லது காலாவதியாக விட வேண்டும்" என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x