

ஈரோடு அருகே மரத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதி தீப்பிடித்ததில், தாய், மகள் உட்பட மூவர் தீயில் கருகி பலியாகினர். தந்தை, மகன் காயம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த நடுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி கதிர்வேல்(65). இவருக்கு நேற்று முன்தினம் இரவு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரை செய்தனர். இதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸில் கதிர்வேலை ஏற்றிக்கொண்டு நள்ளிரவில் ஈரோட்டுக்கு புறப்பட்டனர்.
ஆம்புலன்ஸில் கதிர்வேலின் மகன் பாலசுப்பிரமணி (45), இவரது மனைவி லட்சுமி (40) மற்றும் லட்சுமியின் தாய் செல்லம்மாள் (60) ஆகியோர் வந்தனர். வெள்ளக்கோவிலை அடுத்த தொட்டம்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் ராஜா (20) ஆம்புலன்ஸை ஓட்டி வந்தார்.
ஆம்புலன்ஸ் மொடக்குறிச்சி அடுத்த அய்யகவுண்டன்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது நிலை தடுமாறி, சாலையோரம் உள்ள சிறிய பாலத்தில் உரசியபடி அருகே இருந்த தென்னை மரத்தில் பயங்கரமாக மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், தென்னை மரம் முறிந்து விழுந்தது.
ஆம்புலன்ஸின், ‘சைரன்’ தொடர்ந்து ஒலித்ததால் அருகில் உள்ளவர்கள் அங்கு வந்து ஆம்புலன்ஸ் உள்ளே காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை ஆம்புலன்ஸ் கதவை உடைத்து மீட்க முயன்றனர். கதிர்வேல் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோரை மீட்ட நிலையில், ஆம்புலன்ஸ் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால், உள்ளே சிக்கிய மற்ற மூவரையும் மீட்கமுடியாத நிலை ஏற்பட்டது. தீயை அணைக்க எடுத்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.
இதில், ஆம்புலன்ஸ் உள்ளே சிக்கிய லட்சுமி, செல்லம்மாள், ஓட்டுநர் சங்கர் ராஜா ஆகிய 3 பேரும் சீட்டில் அமர்ந்த நிலையில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.
காயத்துடன் மீட்கப்பட்ட இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
உராய்வால் ஏற்பட்ட தீப்பொறி
விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ் தீ பிடிக்காமல் இருந்திருந்தால், உள்ளே சிக்கிய அனைவரையும் உயிருடன் மீட்டு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் எஸ்.சரவணன் கூறியதாவது:
ஆம்புலன்ஸ் மிக வேகத்துடன் சிறிய பாலத்தின் முனை மீது மோதி உராய்வு ஏற்பட்டு நிலை தடுமாறி மரத்தில் மோதியுள்ளது. உராய்வு காரணமாக ஏற்பட்ட தீப்பொறி டீசல் டேங்கில் பட்டு தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம். பேட்டரி பகுதியில் தீப்பொறி ஏற்பட்டாலும் தீ பிடிக்க வாய்ப்புள்ளது. டீசல் டேங்க் அருகே தீ முதலில் பற்றியதால் தீ வேகமாக பிடித்து ஆம்புலன்ஸ் முழுவதும் பரவியுள்ளது என்றார்.