

‘இந்த வருடம் வழக்கத்துக்கு மாறாக கொத்துக்கொத்தாக பலாப்பழம் பழுத்து தொங்குகிறது. ஆனால், அதை நாங்கள் பறிக்கத்தான் முடியலை. 20 அடி உயரத்துக்குள் உள்ள பழங்களை யானைகள் கபளீகரம் செய்கின்றன. அதற்கு அப்பால் 40 அடி வரை உள்ளதை குரங்குகள் நோண்டி சாப்பிட்டு விடுகின்றன’ என்று அங்கலாய்த்து கொண்டிருக்கிறார்கள் மேட்டுப் பாளையம் கல்லாறு பழப்பண்ணை சுற்றுப்புற விவசாயிகள்.
கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்திலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் கல்லாறு வரை (சுமார் 6 கி.மீ.) தோட்டங்களிலும், வனங்களிலும் ஆயிரக்கணக்கான பலா மரங்கள் உள்ளன. குறிப்பாக, அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான கல்லாறு பழப்பண் ணையில் மட்டும் 200-க்கும் மேற் பட்ட சிங்கப்பூர் பலா, வேர்ப்பலா, வேலிபலா என பல்வேறு வகை யிலான பலா மரங்கள் உள்ளன. இதைச் சுற்றியுள்ள விவசாயிகள் பெரும்பாலும் பாக்குத்தோப்புகளையும், வாழைத்தோப்புகளையும் வைத்துள்ளார்கள். அதற்கு ஊடாக பலாமரங்களையே வளர்க்கின்றனர்.
இந்த பலா மரங்கள் சித்திரை, வைகாசி மாதங்களில் மரத்துக்கு 20 முதல் 30 பழங்கள் வரை காய்ப்பதும், அதை விற்பதும் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. கல்லாறு பழப்பண்ணையைப் பொறுத்தவரை அந்தந்த பலா மரங்களில் என்ன வகை பலா என்று ஒவ்வொன்றிலும் பெயர்ப்பலகை இருக்கும். அதில் காய் பழுத்து தொங்கும் வேளைகளில் சுற்றுலாப் பயணிகள் கேட்கும் போது பறித்து விலைக்கு விற்பதும் வழக்கம். அதிலும் வேர்ப்பலா, சிங்கப்பூர் பலா போன்றவை நல்ல சுவை கொண்டவை. அதில், பலா கொட்டையும் மிகச் சிறிதாக இருக்கும்.
கடந்த 2009-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் கல்லாறு பழப் பண்ணைக்கு போடப்பட்டிருந்த சுற்றுச்சுவர், வேலிகள் அழிந்து விட்டன. எனவே, பழப்பண்ணைக் குள் வரும் வன விலங்குகளைத் தடுக்க முடியாமல் தவிக்கின்றனர். அது மட்டுமல்லாது கனிகள் பழுக் கும் காலங்களில்தான் இப்பகுதிக்கு யானைகள் இடப்பெயர்ச்சியும், நடைபெறுவதால் அவற்றின் வருகையை கட்டுப்படுத்தவே முடிவதில்லை.
இந்த ஆண்டு சித்திரை துவக்கத்திலேயே இடிமின்னலுடன் மழை பெய்துள்ளது. இதனால், முன்பெல்லாம் 20 காய்கள் பிடிப்பதே அரிதாக இருந்த பலா மரங்களில் எல்லாம் தலா 100-க்கும் மேற்பட்ட பலாப்பழங்கள் காய்த்து தொங்குகின்றன. முன்கூட்டியே இவை பழுத்தும் விட்டதால் திரும்பிய பக்கமெல்லாம் பலாப்பழ வாசம் வீசுகிறது. இந்த மணத்தை நுகர்ந்து, காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கின்றன.
20 அடி உயரம் வரை உள்ள பழங்களை யானைகள் சாப்பிட்டு விடுகின்றன. 40 அடி உயரமான மரத்தில் பழுத்து வெடித்து நிற்கும் பலாப்பழத்தை கைகளை விட்டு நோண்டி, நோண்டி கடித்து துப்பிவிடுகின்றன குரங்குகள்.
‘நாங்கள் அறுவடை செய்யும் முன்பே இவை சாப்பிட்டு முடித்து விடுகின்றன. அதிலும் பலாப்பழத்தை சாப்பிட வரும் யானைகள், சுற்றி இருக்கும் வாழை, தென்னை, பாக்கு மரங்களையும் பதம் பார்த்துவிடுகின்றன.
இதனால் இந்த முறை ஏகப்பட்ட சேதம். பாக்குமரத்தை பொறுத்தவரை நடுத்தண்டில் சோறு மாதிரியான பகுதி நல்ல சுவையுடன் இருக்கும். எனவே மரங்களை முறிக்கும் யானைகள் அவற்றையும் சாப்பிட்டு விட்டுத்தான் அகல்கின்றன. வனத்துறையினர் இவற்றை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்கிறார் கல்லாறு விவசாயி வெங்கடேசன்.
பழப்பண்ணை ஊழியர்கள் கூறும்போது, ‘பண்ணையில் நூற்றுக்கணக்கில் உள்ள பலா மரங்களில் ஒன்றுகூட இந்த வருடம் மிச்சமில்லை. பறிக்கலாம் என்றால், யானைகள் நிற்கும். எப்படி வரும் என்றே தெரிவதில்லை. குரங்குகள் கூட்டமோ அருகே விடுவதில்லை. இவற்றின் சேட்டை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது’ என்றனர்.