Last Updated : 14 Mar, 2015 08:30 AM

 

Published : 14 Mar 2015 08:30 AM
Last Updated : 14 Mar 2015 08:30 AM

தமிழகத்தில் மாற்றத்தை விரும்பும் மக்கள் தேர்தலில் என்னை ஆதரிப்பார்கள்: பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை

தமிழகத்தில் மாற்றத்தை விரும்பும் மக்கள் என்னை ஆதரிப்பர் என்று பாமக இளைஞரணித் தலைவரும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

2016-ல் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக அனைத்து தொகுதிகளிலிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது. திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து இதர கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்த அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தங்கள் கட்சியின் முதல்வர் வேட் பாளராக தனது மகனும் தருமபுரி மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான அன்புமணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அண்மையில் அன்புமணி ராமதாஸ், ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

சட்டப்பேரவை தேர்தலுக்கு பாமக தயாராகிவிட்டதா?

பாமக பொதுக்குழுவில் முதல்வர் வேட்பாளராக என்னை அறிவித் துள்ளனர். 32 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறேன். இதுவரை 14 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை தெளிவாகச் சொல்லியே மக்களை சந்திக்கிறோம். இலவசங்கள், மதுக் கொடுமை, சினிமா கலாச்சாரம் ஆகிய அடையாளங்களில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கான திட்டங்களை தயாராக வைத்திருக் கிறோம்.

பாமக ஜாதி சார்புடைய கட்சி என்ற தோற்றம் உள்ள சூழலில் தமிழகத்தில் வெற்றி பெற முடியுமா?

பாமக ஜாதிக் கட்சியோ தலித் மக்களுக்கு எதிரான கட்சியோ அல்ல. இது தமிழகத்தின் 2 பெரிய கட்சிகள் திட்டமிட்டு உருவாக்கி வரும் தோற்றம். வருத்தமான விஷயம் என்னவென்றால், ஊடகங்களும் இந்தத் தோற்றத்தை நம்புகின்றன. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தேன். இதனால் ஆண்டுதோறும் சுமார் 3 ஆயிரம் தலித் மாணவர்கள் தேர்வு எழுதி மருத்துவம் படிக்கிறார்கள்.

தருமபுரி சம்பவத்தில் பாமகவை பலரும் குற்றம்சாட்டிய சூழலில், சிலரின் கருத்துகள் தலித்துகளுக்கு எதிராக இருந்ததே?

தருமபுரி காதல் விவகாரத்தைத் தொடர்ந்து அரங்கேறிய விரும்பத் தகாத சம்பவங்களில் பாமகவுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்பதுதான் உண்மை. அதேசமயம், ஜாதி ரீதியில் இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட குழுவினர் வன்னிய சமுதாய பெண்களை காதலித்து ஏமாற்றி, அதை வைத்தே பணம் பறிக்கும் சம்பவங்கள் நடப்பது உண்மை. இதைத்தான் ‘நாடகக் காதல்’ என்று கண்டித்தோம்.

வன்னியர் - தலித் பிரச்சினை என்பது தொடர்ந்துகொண்டே உள்ளதே?

தலித் மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் நாங்கள். வன்னியர் - தலித் பிரச்சினை ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. அந்த நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு இருக்கிறோம்.

உங்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததது எந்த அளவுக்கு பலன் தரும் என்று நினைக்கிறீர்கள்?

டெல்லியில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் ஆழமாக விரும்பியதால் கேஜ்ரிவாலுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். அதே மனநிலை தமிழகத்தில் 15 ஆண்டுகளாக உள்ளது. 45 சதவீதம் பொது வாக்காளர்கள், ஜெயலலிதா மீது கோபத்தில் உள்ளனர். திமுக மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். திமுக, அதிமுக வாக்கு வங்கி குறைந்துவருகிறது. மாற்றம் வேண்டும் என்று நினைத்து விஜயகாந்துக்கு 10 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். கூட்டணிக்கு சென்றதால், அவருடைய வாக்கு வங்கி போய்விட்டது. தருமபுரியில் மக்கள் என்னை நம்பினர். அதே போல தமிழகம் முழுவதும் மக்கள் என்னை நம்புவர்.

தென் தமிழகத்தில் நீங்கள் போட்டியிடுவீர்களா?

இது மாதிரியான கேள்விகள் சமீபகாலமாக வந்து கொண்டுள்ளன. இதை கட்சிதான் முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்த வரை பாமகவுக்கு 15 சதவீத வாக்கு வங்கி உள்ளது. தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கட்சியைப் பலப்படுத்த நிறைய பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

அப்பா மாதிரி நான் இல்லை

‘‘மொழி, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றில் எனது தந்தை ராமதாஸ் மிகவும் தீவிரமானவர். நான் அப்படி இல்லை. நான் ஒரு மிதவாதி. காலத்துக்கேற்ப மாறிக் கொள்வேன்’’ என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x