

நியூட்ரினோ திட்டம் குறித்து பொது விவாதத்துக்கு தயாரா என மத்திய அரசுக்கு மேதா பட்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக மதிமுக பொதுச் செயலர் வைகோ, மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ஆலோசகரும், சமூக ஆர்வலருமான மேதா பட்கர் ஆகியோர் நேற்று மதுரை அருகேயுள்ள செக்கானூரணி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தனர். முன்னதாக மதுரையில் மேதா பட்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தத் திட்டத்தால் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு பேராபத்து காத்திருக்கிறது. ஆய்வு மையத்திலிருந்து கதிர்வீச்சு வெளியேறாது என சிலர் கூறுகின்றனர். இத்திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க பொது விவாதத்துக்கு மத்திய அரசு தயாரா? மோடியும், ஒபாமாவும் மட்டும் முடிவெடுக்கக்கூடிய திட்டமல்ல இது. மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினை. எனவே தமிழக, கேரள மாநில மக்களிடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலை அழியும் ஆபத்தில் இருப்பதாக கஸ்தூரிரங்கன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் உலகின் பாரம்பரிய பகுதியாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த மலை. நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இந்த இடத்தை தேர்வு செய்தது தவறு. மலைகளைக் குடைந்து 2.5 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைப்பதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு உதாரணம் உத்தரகாண்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் நிகழ்வு. இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்தும் முன், சுற்றுச்சூழல் தொடர்பாக ஏதாவது ஆய்வு செய்துள்ளீர்களா எனக்கேட்டால், சலீம் அலி பவுண்டேஷன் எடுத்த ஆய்வறிக்கையைக் காட்டுகின்றனர். அவர்கள் பறவைகளை கணக்கெடுக்கும் அமைப்பு. அவர்களுக்கும், நியூட்ரினோவுக்கும் எந்த தொடர்புமில்லை.
மாநில அரசின் ஒப்புதலின்றி, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் நேரடியாக இத்திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இதுவரை இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை. எனவே இத்திட்டத்தால் காற்று, நீர், சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து விரிவான ஆய்வு செய்ய வேண்டும்.
அமெரிக்காவின் சிகாகோ நகரிலுள்ள ஆராய்ச்சி நிறுவனத் துக்காக மட்டுமே இந்த ஆய்வுக் கூடம் அமைக்கப்படுகிறதே தவிர, இந்தியாவுக்கு எந்த பலனும் ஏற்படப்போவதாக தெரியவில்லை. மேலும் இந்த திட்டத்துக்காக தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அதை எங்கிருந்து பெறுவர் எனக் கூறப்படவில்லை. திட்டத்தின் உண்மை நோக்கம் என்ன? கூடங்குளம் அணுஉலை கழிவுகளை கொட்டும் இடமாக பொட்டிபுரத்தை மாற்ற முயற்சிப் பதாக சந்தேகிக்கிறோம். மக்களின் அங்கீகாரமின்றி இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது.
நாங்கள் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் இந்த திட்டத்தால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழ்நிலை உருவானதால் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதன்பின்னர் மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறும்போது, இத்திட்டம் தொடர்பாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை உடனே தெரிவிக்க வேண்டும் என்றார்.
மதுரையை அடுத்த செல்லம்பட்டியில் நியூட்ரினோ திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் விளக்குகிறார் சமூக ஆர்வலர் மேதா பட்கர். உடன் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
படம்: ஜி.மூர்த்தி.