

காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் பூரண குணமடைந்த முடி திருத்தும் தொழிலாளி, காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளோருக்கு இலவசமாக முடி திருத்தும் பணியை செய்து வருகிறார்.
நாகர்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஈத்தங்காடு சந்திப்பில் உள்ள `ரூபி’ சலூன் கடை முழுவதும் காசநோய் விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டி வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்தம் செய்த பின், அவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தையும் வழங்குகிறார் கடையின் உரிமையாளர் மோகன்.
காசநோய் பாதிப்பில் இருந்து மீண்டதோடு, நம்பிக்கை நட்சத்திரமாகவும் வலம் வரும் மோகன் கூறியதாவது:
`என் சொந்த ஊரு திங்கள் சந்தை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தோட சுசீந்திரத்தில் இருக்கேன். சின்ன வயசுல இருந்து எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. 3 வருஷத்துக்கு முன்னாடி திடீர்ன்னு உடல் பலவீனம் அடைஞ்சு போச்சு. மதியத்துக்கு மேல் காய்ச்சல், இருமல்னு படுத்தி எடுத்துடுச்சு. காசநோய் இருப்பதாக கண்டுபிடிச்சு சொன்னாங்க. அப்படியே இடிஞ்சு போயிட்டேன்.
இலவச சிகிச்சை
என் மனைவி தான் எனக்கு அனுசரணையா இருந்தாங்க. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட காசநோய் மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தாங்க. காசநோய் தடுப்பு துணை இயக்குநர் வி.பி.துரை, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், சிகிச்சை மேற்பார்வையாளர் குமார் ஆகியோர் `மாத்திரை, மருந்தை ஒழுங்கா சாப்பிட்டா காச நோயை விரட்டிரலாம்’னு கவுன்சிலிங் கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்துனாங்க.
என் மனைவி எனக்கு இன்னொரு அம்மா மாதிரி. ஒரு மாசம் காசநோய் மையத்தில் தங்கி சிகிச்சை எடுத்துகிட்டேன். வீட்டுக்கு வந்து 5 மாசம் தொடர்ந்து மாத்திரை, மருந்துகள் சாப்பிட்டேன். என் மனைவி தான் மருத்துவர்கள் கொடுத்த நம்பிக்கையை எனக்குள் தொடர்ந்து விதைத்து, என்னை கரை ஏற்றி விட்டுருக்காங்க.
பூரண குணம்
மருத்துவமனையில் என்னை பார்க்க வந்த உறவுக்காரர்கள் பலரும் நான் இறந்து விடுவேன்னு தான் சொல்லிட்டு போனாங்க. ஆனால் முறையான சிகிச்சையும், நம்பிக்கையும் காசநோயை விரட்டிவிட்டன. சிகிச்சை முடிந்து, பூரண குணமடைந்து இப்போது வாழும் வாழ்க்கை கடவுள் கொடுத்த இரண்டாவது இன்னிங்க்ஸ். அதனால் தான் அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன்.
சேவையே வாழ்க்கை
சாதாரண சலூன் கடை பணியில் தான் உள்ளேன். என்னால் நிதி உதவி செய்யும் அளவுக்கு பொருளாதார நிலை இல்லை. ஆனால் என் தொழில் இருக்கிறது. இதை வைத்தே உதவி செய்வது என தீர்மானித்தேன்.
இலங்காமணிபுரம், சுசீந்திரம் பகுதிகளில் இருந்து என் கடைக்கு முடி வெட்ட வந்த இருவருக்கு காசநோய்க்கான அறிகுறிகள் இருப்பதை கண்டறிந்து சிகிச்சைக்கு அனுப்பி வைத்தேன். இப்போது அவர்களும் குணமடைந்துள்ளனர்.
மாவட்ட காசநோய் மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வரும் காசநோயாளிகளுக்கு மையத்துக்கு சென்று இலவசமாக முடி திருத்தம் செய்து வருகிறேன். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லம், உடல் சுகவீனத்தாலும், குடும்பங்களின் சரியான கவனிப்பு இல்லாமலும் படுக்கையிலேயே இருப்பவர்கள் வரை தகவல் கிடைத்தால் தேடிச் சென்று இலவசமாக முடி வெட்டி வருகிறேன்.
என் கடைக்கு செவ்வாய் விடுமுறை. அன்று முழுவதும் ஆதரவற்றோர், நோயாளிகளுக்கு இலவசமாக முடி வெட்டச் சென்று விடுவேன். அகத்தின் அழகு, முகத்தில் தெரியும் என்பார்கள். முகத்தை அழகாக்கியதும், அவர்கள் சிரிக்கும் அந்த ஒற்றை நொடி சிரிப்புக்கு ஈடு எண்ண இருக்க முடியும்?’ என்றார் மோகன்.