Last Updated : 08 Mar, 2015 09:31 AM

 

Published : 08 Mar 2015 09:31 AM
Last Updated : 08 Mar 2015 09:31 AM

பொது இடங்கள் பெண்களுக்கு பாதுகாப்பானதா? - பல்வேறு துறை மகளிர் சிறப்பு பேட்டி

‘வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’ என்றார் மகாகவி பாரதி. இன்று பெண்கள் பலரும் கல்விக்காகவும், வேலைக் காகவும் வீட்டுச் சிறையில் இருந்து விடுதலை பெற்று வெளியே வந்துள்ளனர். ஆனால், பொது இடங்களில் பெண்கள் சுதந்திரமாக இருக்க முடிகி றதா? பேருந்து நிறுத்தம், கல்வி நிறுவனங்கள், அரசியல் தளங் கள் உட்பட எல்லா தளங்களி லும் பெண்கள் 100 சதவீதம் பாதுகாப்பாக உணர்கிறார் களா? இரவு நேரங்களில், கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில், ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில், பேருந்து நிறுத்தங்களில், பொதுக் கழிப்பிடங்களில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கிறதா? பல துறைகளை சேர்ந்த மகளிர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

புகைப்பட நிபுணர் நேஹா சாமுவேல்:

புகைப்படம் எடுப்பது என்பது ஆண்களின் தொழிலாக இருந்தது. எனவே, இந்த துறையில் நான் திறமையானவள் என்று மட்டுமின்றி, ஆணைவிட நான் திறமையானவள் என்றும் நிரூபிக்க வேண்டியது அவசியமா கிறது. உடல்நலம் சரியில்லாமல் சற்று அயர்ந்தால்கூட, ‘பெண் தானே. இந்த துறைகளில் அவர்கள் நிலைத்து நிற்கமுடியாது’ என்று கூறிவிடுவார்கள். எனவே, என்னால் முடியாதபோதும், இந்த பணி மீது கொண்ட ஆர்வத்தால் தொடர்ந்து செயல்பட்டு வரு கிறேன்.

துப்புரவுத் தொழிலாளி ஆனந்தி:

வியாசர்பாடியில் இருந்து தினமும் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு சேப்பாக்கத்துக்கு வருகிறேன். காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை சாலையில் நின்று குப்பைகளைக் கூட்டவேண்டும்.

காலையில் 30 பெண்கள் ஒன் றாக வருவதால் பயணத்தின்போது பயமில்லை. பணி நேரத்தில் அருகில் கழிப்பிடங்கள் இருக்காது. சில நேரம் கஷ்டமாக இருக்கும். அதுவும் பழகிவிட்டது.

கல்லூரி மாணவி புனிதா:

ராய புரத்தில் இருந்து ராணிமேரி கல்லூரிக்கு ஒரே ஒரு பேருந்து 6டி மட்டும்தான் உள்ளது. அதனால் பேருந்தில் எப்போதும் கூட்டமாக இருக்கும். அருகில் வந்து யாரும் சீண்டக்கூடாது என்பதால், சிரம மாக இருந்தாலும்கூட பைகளை மாட்டிக்கொண்டே நிற்போம். மருந்தகத்தில் சானிட்டரி நாப்கின் வாங்கும்போதுகூட கேலி செய் பவர்கள் இருக்கிறார்கள்.

எழுத்தாளர் சந்திரா:

பெண்கள் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். பொருளா தார தளம், அறிவு தளத்திலும் இயங்க முடியும் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. பெண்கள் பொதுவெளி யில் இயங்கக் கூடாது என்ற பிற் போக்கான மனநிலையையே பல ஆண்கள் கொண்டுள்ளனர்.

சென்னை ஐஐடி பேராசிரியை கல்பனா:

ஆணுக்கு கிடைக்கும் அனைத்து ஜனநாயக உரிமை களும் பெண்ணுக்கு தானாக கிடைப்பதில்லை. பெண்கள் கடந்த 20 ஆண்டுகளில் வேலை, உயர்கல்வி, அரசியல் ஆகிய தளங்களில் அதிகம் இயங்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், தங்களது இடத்தை பெண்கள் கைப்பற்ற நினைப்பதாக ஆண்கள் கருதுகின்றனர். சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகம் உள்ளதால், ‘ஆண்களின்’ இடங்களில் நுழையும் பெண்கள் ‘தண்டிக்கப்படுகிறார்கள்’. அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பெண்களுக்கு ஒரு சில உரிமைகளே கிடைத் துள்ளன. வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது போன்ற முக்கிய முடிவு எடுக்கும் உரிமை இன்னமும் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் அனைத்து பெண்களுக்குமே உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x