

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியின் மகன், அமெரிக்காவில் நடந்த விபத்தில் உயிரிழந்தார்.
சமூக சமத்துவப் படையின் நிறுவனர் மற்றும் தலைவர் சிவகாமி. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. இவரது இளைய மகன் சுனா என்ற சுகந்தன், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்துவந்தார். இந்நிலையில், காரில் செல்லும்போது சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார்.
இரா.முத்தரசன் இரங்கல்
அவரது மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘‘சமூக சமத்துவப் படையின் நிறுவனரும், அக்கட்சித் தலைவரும், சிறந்த எழுத்தாளருமான சிவகாமியின் இளைய மகன் சுகந்தன் அமெரிக்காவில் மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
சுகந்தனை இழந்து வாடும் சிவகாமிக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது’’ என்று அவர் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.