

மதுரையில் கட்டப்பட்டு வரும் உலக தமிழ்ச் சங்க வளாகத்தில், தென்தமிழகத்தின் மிகப் பெரிய நூலகம் அமையவுள்ளது. அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ள இந்த நூலகத்துக்காக இப்போதே புத்தகங்கள் வரத் தொடங்கியுள்ளன.
1981-ல் 5-வது உலகத் தமிழ் மாநாட்டின்போது எம்ஜிஆரால் அறிவிக்கப்பட்ட மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் கட்டும் திட்டம், சுமார் 30 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. பின்னர், 2010-ல் கோவை உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது, அந்தத் திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது.
பெயரை மட்டும், ‘தொல்காப்பியர் உலகத் தமிழ் செம்மொழிச் சங்கம்’என்று மாற்றிய அன்றைய முதல்வர் கருணாநிதி, இந்தத் திட்டத்துக்காக 100 கோடியே 14 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்து ஆணையிட்டார்.
அதில், ரூ. 75 கோடியை தொடர் செலவினத்துக்குப் பயன்படும் வகை யில், வட்டி தரக் கூடிய பொது வைப்புக் கணக்கில் வைக்கவும், எஞ்சிய ரூ. 25 கோடியில் தமிழ்ச் சங்க கட்டிடம் கட்டவும் முடிவெடுக் கப்பட்டது. பின்னர், திமுக அரசே ‘உலகத் தமிழ் செம்மொழித் தொல்காப்பியர் பேரவை’என்று பெயரை மாற்றியது.
வேகமெடுத்த கட்டுமானப் பணி
அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு, மீண்டும் எம்ஜிஆர் சூட்டிய பெயரிலேயே அதாவது, ‘மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்’ என்ற பெயரில் தொடர்ந்து இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2012, ஜூலையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர், 4.12.2014 அன்று பூமி பூஜையுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
தரைத்தளம் மற்றும் முதல் மாடியுடன் சேர்த்து மொத்தம் 80 ஆயிரம் சதுரடியில் இந்த வளாகம் கட்டப்படுகிறது.
இங்கு நிர்வாக அலுவலகம், குளிரூட்டப்பட்ட கலையரங்கம், கணினி அரங்கம் உள்ளிட்ட வற்றுடன் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களையும், அவ்விடங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையையும் விளக்கும் அரங்கமும் அமையவுள்ளன. ஓராண்டுக்குள் பணியை முடிக்கும் வகையில், கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
பிரமாண்ட நூலகம்
இந்த தமிழ்ச் சங்க வளாகத்தில், 12 ஆயிரம் சதுரடியில் தென் தமிழகத்தின் மிகப் பிரமாண்ட நூலகமும் அமைகிறது. உலகத் தமிழ் அறிஞர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டுள்ள பெட்டகமாக இந்த நூலகம் திகழ வேண்டும் என்றும், சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட ஆய்வாளர்களுக்குத் தேவையான அத்தனை நூல்களும் இங்கு இருக்க வேண்டும் என்றும் திட்டமிடப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை உலக தமிழ்ச் சங்க தனி அலுவலர், அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘பிரிட்டிஷ் நூலகத்தைப்போல, மதுரை உலக தமிழ்ச் சங்கத்திலும் நூலகம் ஏற்படுத்தப்படவுள்ளதால், தமிழக அரசின் பொது நூலகத் துறைக்கு வரும் அனைத்து நூல்களிலும் ஒரு படியை இங்கு அனுப்ப வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
5617 நூல்கள்
இதனடிப்படையில், இதுவரை 5,617 நூல்கள் மதுரைக்கு வரப் பெற்றுள்ளன. கூடுதலாக புத்தகங்கள் வாங்க அரசிடம் ரூ. 25 லட்சம் கோரப்பட்டுள்ளது. மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையிலேயே ஒரு பிரிவாகச் செயல்பட்டு வந்த உலகத் தமிழ்ச் சங்கம், தற்போது அண்ணாநகர் அம்பிகா திரையரங்கம் அருகேயுள்ள காவியன் பிளாசா கட்டிடத்தின் 3-வது தளத்தில் தனியாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.
இந்த அலுவலகத்தின் ஒரு பிரிவிலேயே தற்போது நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பொதுமக்கள் பயன்படுத்த இன்னும் அனுமதி வரவில்லை.
மதுரை உலகத் தமிழ்ச் சங்க கட்டுமானப் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என்றும், அதைத் தொடர்ந்து, 2016, பிப்ரவரி மாதத்துக்குள் சங்கக் கட்டிடமும், நூலகமும் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.