

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால், நாங்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்தத்தை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தின்போது இளங்கோவன் பேசியதாவது:
நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்தம் விவசாயிகளின் உரிமைகளை பறிக்கும் செயலாகும். ஏழைகளையும், விவசாயிகளையும் வஞ்சிக்கிற வகையிலேயே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை மறந்து செயல்படுவதால் பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடி கிழிந்துள்ளது.
சாதாரணமாக டீ வியாபாரம் செய்து கொண்டிருந்த மோடி, இன்றைக்கு 10 லட்சம் ரூபாய்க்கு உடை அணிகிறார். மோடி இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு காங்கிரஸ் வாங்கி கொடுத்த சுதந்திரமும் ஜனநாயகமும்தான் காரணம். தற்போதைய நிலம் கையகப்படுத்தும் சட்டம் பணக்காரர்கள், பன்னாட்டு தொழிலதிபர்களுக்கு உதவுகிற வகையில்தான் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அதிமுகவும் ஆதரித்துள்ளது. வழக்குகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ளத்தான் ஜெயலலிதா நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ஆதரித்துள்ளார். வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதற்காக அத்துறையின் அமைச்சர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இவ்வாறு இளங்கோவன் பேசினார்.