Published : 04 Mar 2015 09:57 AM
Last Updated : 04 Mar 2015 09:57 AM

தொழிற்சங்கத்தின் பொது நிதியிலிருந்து நிர்வாகிக்கு பாராட்டு விழா நடத்தக் கூடாது: ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்க வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

தொழிலாளர்களின் நலனுக்காக மட்டும் செலவு செய்ய வேண்டிய தொழிற்சங்கத்தின் பொது நிதியை, சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாராட்டு விழா நடத்த பயன்படுத்தக் கூடாது என சென்னை மாநகர சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எம்.பாஸ்கரன் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவருக்கு கடந்த 28-ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவ ரான என்.வெங்கடசுப்பிரமணியன், சென்னை மாநகர சிவில் நீதிமன்றத் தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

‘ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க விதிமுறைகளின்படி சங்கத்தின் பொது நிதியை தொழிலாளர்களின் நலன்களுக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும். தற்போது சங்கத்தின் பொதுச் செயலாளராக இருப்பவருக்கு பாராட்டு விழா நடத்துவதற்காக சங்கத்தின் பொது நிதி பயன்படுத்தப்படுகிறது. அவ் வாறு பயன்படுத்துவது விதிமுறை களுக்கு முரணானது. ஆகவே, பொதுச் செயலாளருக்கு நடத்தப் படும் பாராட்டு விழாவுக்கு சங்கத் தின் பொது நிதியை செலவு செய்ய நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு தொடர்பாக சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தின் 17-வது உதவி நீதிபதி எஸ்.அப்துல் மாலிக் விசாரணை மேற்கொண் டார். மனுதாரர் தரப்பில் வழக்க றிஞர்கள் கே.இளங்கோ, ஜி.சம்கி ராஜ், எம்.சமந்தா ஆகியோரும் தொழிற்சங்கம் சார்பில் வழக்க றிஞர்கள் கே.எம்.ரமேஷ், எஸ்.அப்புனு, கே.அனிதா, கே.ஜே.விஜயகுமார் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.

‘பணி ஓய்வுபெறும் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சங்கத்தின் பொது நிதியிலிருந்து பாராட்டு விழா நடத்துவது என்பது பல ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கமான நிகழ்வுதான். சங்கத்துக்கு பெருமளவு நிதி வசதி உள்ள நிலையில், மிகக் குறைந்த தொகையை மட்டும் கொண்டு இந்த விழா நடத்தப்படுகிறது. இவ்வாறு செலவு செய்யப்படும் தொகைக்கு சங்கத்தின் பொதுக்குழு ஒப்புத லும் பெறப்படும். ஆகவே, உள்நோக் கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தொழிற்சங்கம் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் மாலிக், தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

சங்கத்தின் உறுப்பினர்களால் வழங்கப்படும் பொது நிதி என்பது, சங்க உறுப்பினர்களின் பொது நலன்களுக்காக மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும் என விதி முறையில் கூறப்பட்டுள்ளது. அதற்கேற்ப சங்கத்தின் நிதியை பராமரிக்கும் காப்பாளர்களாக நிர்வாகிகள் செயல்பட முடியும். ஆகவே, சங்கத்தின் பொதுச் செயலாளருக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவுக்கு பொது நிதியைப் பயன்படுத்த தடை விதிக் கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x