Published : 16 Mar 2015 09:20 AM
Last Updated : 16 Mar 2015 09:20 AM

குழந்தைகளை கவர்ந்த வண்ண வண்ண இட்லி: சென்னை கண்காட்சியில் ருசிகரம்

வியாசர்பாடியில் நடந்த கண்காட்சியில் விதவிதமான வடிவங்களில், பல வண்ணங்களில் இடம் பெற்ற இட்லிகளை குழந்தைகளும் பெண்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர். சென்னை வியாசர்பாடியில் மல்லிப்பூ இட்லிக் கடை சார்பில், புதுமையான இட்லி கண்காட்சி நேற்று நடத்தப்பட்டது.

இதில் நட்சத்திரம், ஆங்கில எழுத்துகள், பழங்கள் உள்ளிட்ட பல வடிவங்களில், வெவ்வேறு வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட ஆயிரம் வகையான இட்லிகள் இடம் பெற்றிருந்தன. இதை பெண்களும் குழந்தைகளும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டுச் சென்றனர்.

கண்காட்சியை ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், ஞானப்பிரகாசம் ஆகியோர் திறந்துவைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய நீதியரசர் வள்ளிநாயகம், ‘‘இட்லியில் புதுமை என்பது வரவேற்கத்தக்க விஷயம். வட இந்தியர்கள்கூட இன்றைக்கு இட்லியைத்தான் விரும்பிச் சாப்பிடுகின்றனர். இதுபோன்ற முயற்சிகளை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.

கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த மு.இனியவன் கூறும்போது, ‘‘இட்லி தயாரிப்பில் பல புதுமைகளை புகுத்தினோம். இளநீர் இட்லி, பைன் ஆப்பிள் இட்லி மற்றும் 10 கிலோ, 30 கிலோ, 124 கிலோ என மெகா சைஸ் இட்லிகளை தயாரித்துள்ளோம். இப்போது ஆயிரம் வகையான இட்லிகள் கண்காட்சியை நடத்தியுள்ளோம். வெவ்வேறு வடிவத்தில் செய்யப்பட்ட இட்லி, குழந்தைகளை வெகுவாக கவரும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x