

தமிழகம் மட்டுமல்ல, இந்திய அளவிலும், உலக அளவிலும்கூட பெண்களின் வாழ்க்கை என்பதே போராட்டமாக உள்ளது என்று திமுக மகளிர் அணி மாநிலச் செய லாளர் கனிமொழி தெரிவித்தார்.
திமுக மகளிர் அணி சார்பில் கோவையில் உலக மகளிர் தின விழா இன்று (மார்ச் 7) தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில் முதல் முக்கிய நிகழ்வாக சமூக நீதி பெற உழைக்கும் பெண்கள் ஐந்து பேர் தங்கள் துறையின் போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு சொந்தமான சிங்காநல்லூரில் உள்ள விஜயா பொருட்காட்சி வளாகத்தில் விழா நடக்கிறது. திமுக மகளிர் அணி மாநிலச் செயலாளராக கனிமொழி தேர்வு பெற்ற பிறகு நடக்கும் முதல் நிகழ்ச்சி இது.
மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
`பெண் குரல்’ என்ற தலைப்பில் இன்று காலை நடக்க இருக்கும் தொடக்க விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மனித உரிமை ஆர்வலர் மீனாட்சி, ஆம்னெஸ்ட்டி இண்டர்நேஷனல் தலைமை ஊடக அதிகாரி துர்கா நந்தினி, பெரியாரியலாளர் ஓவியா, ஸ்டெப்ஸ் பெண்கள் அமைப்பின் தலைவர் டி.ஷரிஃபா உரையாற்ற உள்ளனர். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கனிமொழி வரவேற்புரை நிகழ்த்துகிறார். மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியின் இறுதிக் கட்ட ஏற்பாடுகளை நேற்று கனிமொழி பார்வையிட்டார். தொடர்ந்து, `தி இந்து’ செய்தியாளரிடம் கனி மொழி கூறியது: கோவையில் இந்நிகழ்ச்சியை நடத்த தனிப் பட்ட காரணங்கள் எதுவும் இல்லை. இங்கே நிகழ்ச்சிகள் நடத்தி நீண்டகாலமாகி விட்ட காரணத்தால் சென்னையை தவிர்த்து கோவையில் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
நான் மகளிர் அணி மாநிலச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதாலும், கட்சியினர் கூடுதல் கவனம் செலுத்தி உழைப்பதாலும், இந்த விழா புதிதாக நடப்பதுபோல தோற்றம் கொண்டுள்ளதாக கருதுகிறேன்.
வேலைவாய்ப்பு நிகழ்ச்சி
தமிழகம் மட்டுமல்ல, இந்திய அளவிலும், உலக அளவிலும்கூட பெண்களின் வாழ்க்கை என்பதே போராட்டமாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பேச்சாளர்கள் சமூகம் நீதி பெற உழைக்கும் பெண்கள். அவரவர் துறையின் வழியாக பல தளங்களில் உரிமை மறுக்கப்பட் டவர்களின் குரலாக செயலாற்றி வருபவர்கள். இவர்கள் நம்மோடு, தாம் தாண்டி வந்த பாதைகள் பற்றியும், அதில் அவர்கள் எதிர்கொண்ட போராட்டங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்வார்கள்.
கல்லூரி மாணவிகள் 2000 பேர் பங்கேற்கும் வேலைவாய்ப்பு நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.