Published : 21 Mar 2015 02:47 PM
Last Updated : 21 Mar 2015 02:47 PM

நிலச் சட்டத்தை எதிர்த்து மார்ச் 23-ல் ஆர்ப்பாட்டம்: ஈவிகேஎஸ் இளங்கோவன் தகவல்

மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத போக்கினை கண்டிக்கிற வகையில் தமிழ்நாடு காங்கரஸ் கட்சி சார்பாக ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட தலைநகரங்களில் 23.03.2015 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழில் முனைவோர் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்புடைய நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடிஅமர்வு சட்டத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பாஜக ஆதரவோடு ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

120 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட நில கையகப்படுத்துதல் சட்டத்தில் பொது நன்மைக்காக எந்த நிலத்தையும் அரசு கையகப்படுத்துகிற உரிமை வழங்கப்பட்டிருந்தது. அந்த உரிமை விவசாயிகளின் நில உடைமையை மறுக்கின்ற வகையில் இருந்ததால் அந்த சட்டத்தை திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

காங்கிரஸ் கொண்டுவந்த சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் பாஜகவை சேர்ந்த கல்யாண்சிங் மற்றும் சுமித்ரா மகாஜன் தலைமையில் அமைக்கப்பட்ட நிலைக் குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டதோடு அருண்ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் கொண்டுவந்த அனைத்துத் திருத்தங்களும் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இச் சட்டத்திற்கான விதிகள் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் சேர்க்கப்பட்டதோடு ஆகஸ்டு 2014ல் தான் அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இத்தகைய நடைமுறைகளை செய்துவிட்டு திடீரென்று அவசர அவசரமாக சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் பாஜகவுக்கு ஏன் ஏற்பட்டது?

கார்ப்பரேட் நிறுவனங்களின் வற்புறுத்தலா? பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் முயற்சியா?மத்திய காங்கிரஸ் அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் அரசு மற்றும் தனியார் துறை இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த 70சதவிகிதம் நில உரிமையாளர்களிடமிருந்து ஒப்புதல் பெறவேண்டும். தனியார் திட்டங்களுக்கு 80 சதவிகிதம் ஒப்புதல் பெறவேண்டும். இதனால் வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்தப்படுவது தவிர்க்கப்படுகிறது.

எந்த ஒரு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளிலும் உள்ளாட்சி அமைப்புகளில் - குறிப்பாக கிராம சபை, பஞ்சாயத்து ஒப்புதல் இல்லாமல் எந்த நிலத்தையும் கையகப்படுத்த முடியாது. நில உரிமையாளர்களுக்கு முழு இழப்பீட்டு தொகையும் வழங்கி மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு நடவடிக்கைகள் முழுமையாக முடிந்த பின்னரே, நில உரிமையாளர்களை நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளமுடியும். அந்த நிலத்தை நம்பி வாழ்ந்து வந்த வேளாண் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

பாஜக அரசின் சட்டத்தின் படி விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலேயே எந்த நிலத்தையும் அரசுக்காகவோ தனியார் துறைக்காகவோ மூன்று போகம் செய்யும் நன்செய் நிலத்தை கையகப்படுத்த முடியும். இது விவசாயிகளின் அடிப்படைநில உரிமையைப் பறிக்கின்ற செயலாகும்.

நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கும் வேறு காரியங்களுக்கு பயன்படுத்தவதற்கும் புதிய சட்டம் வழிசெய்கிறது. புதிய சட்டத்தின்படி சமூக மதிப்பீடு அறிக்கை இல்லாமலே நிலம் கையகப்படுத்துவதற்கு ஒரு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் அரசு தனியார் துறை இணைந்த தொழில் பூங்கா, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழில் மண்டலங்கள், பத்து இலட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கின்ற நகரங்களில் 3 நட்சத்திர ஹோட்டல்கள் கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் உள்நாட்டு பன்னாட்டு தொழில் அதிபர்கள் அரசு ஆதரவோடு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை கபளீகரம் செய்து அபகரிக்க முடியும். இது விவசாயிகளின் வயிற்றிலடிக்கிற செயலாகும்.

குஜராத் மாநிலத்தில் அரசு நிலத்தை குறைந்த அடிமாட்டு விலையில் அம்பாணி, அதானி குழுமத்திற்கு பாதுகாப்பு மிகுந்த எல்லைப்புற கட்ச் பகுதியை தாரை வார்த்த நரேந்திர மோடி இன்றைக்கு இந்தியாவில் உள்ள விவசாயிகளின் நிலத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களும் தாரை வார்க்கும் நோக்கத்துடன்தான் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாஜகவின் விவசாயிகள் விரோத சட்டத்தை அதிமுக ஆதரிப்பதன் மர்மம் என்ன? தமக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையிலிருந்து விடுவித்துக் கொள்ள பேரம் பேசுவதற்கு இதை பயன்படுத்துகிறாரா?

மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோதப் போக்கினை கண்டிக்கிற வகையில்தமிழ்நாடு காங்கரஸ் கட்சி சார்பாக ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட தலைநகரங்களில் 23.03.2015 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இப்போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள விவசாயப் பெருங்குடி மக்கள், தமது உரிமைகளைப் பாதுகாத்து வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அணிதிரண்டு ஆதரவு தெரிவிக்குமாறு அன்போடு அழைக்கிறேன்.

தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் திரண்டு பாஜகவின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் உள்ள விவசாயிகளின் எதிர்காலத்திற்கு உலை வைக்கின்ற செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கண்டன குரல் எழுப்பிட வேண்டுகிறேன்.'' என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x