ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு தனிச் சட்டம்: தமிழக அரசுக்கு ‘ஜாக்டோ’ வலியுறுத்தல்

ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு தனிச் சட்டம்: தமிழக அரசுக்கு ‘ஜாக்டோ’ வலியுறுத்தல்
Updated on
1 min read

தமிழகத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மருத்துவப் பணி சார்ந்த பாதுகாப்புச் சட்டம் இயற்றியதைப் போன்று, ஆசிரியர்களின் பாதுகாப்புக்காக தனியாக ஒரு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாநில ‘ஜாக்டோ’ உயர்மட்டக் குழு உறுப்பினரும், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளருமான இரா.தாஸ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

6-வது ஊதியக் குழுவில் தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. 6-வது ஊதியக் குழுவில் மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ள அனைத்துப் படிகளையும் தமிழக அரசு ஆசிரியர் களுக்கும், அலுவலர்களுக்கும் வழங்க வேண்டும். அகவிலைப்படி நூறு சதவீதம் அளவை கடந்து விட்டால் 50 சதவீதம் அகவிலைப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.

சமீபகாலமாக ஆசிரியர்களின் பணியில் சமூக விரோதிகளின் தலையீடும், ஆசிரியர்களின் பணிக்கு பாதுகாப்பின்மையும் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மருத்துவப் பணி சார்ந்த பாதுகாப்புச் சட்டம் இயற்றியதைப் போன்று ஆசிரியர்களின் பாதுகாப்புக்கென தனியாக ஒரு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும். மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 8-ம் தேதி திருவள்ளூரில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி நடத்தப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in