

சரக்குகளை கையாள்வதில் நடப்பு நிதியாண்டில் எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகம் இரண்டா வது இடத்தைப் பிடித்துள்ளது. இத் துறைமுகம் 14.27 சதவீதம் அளவுக்கு சரக்குகளை கையாண்டுள்ளது.
பழமையான சென்னை துறை முகத்தில் ஏற்பட்ட இடநெருக்கடி காரணமாக, மேலும் ஒரு வர்த்தக முனையமாக எண்ணூர் துறைமுகம் உருவாக்கப்பட்டது. மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள 12-வது துறை முகமான இது, 2001-ம் ஆண்டில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ.1,056 கோடி செலவில் தொடங்கப் பட்டது. 2004-ம் ஆண்டில் இங்கு ரூ.1,400 கோடி முதலீட்டில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்புடன் 3 முனையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இத்துறைமுகத்தில் கப்பல் நிறுத் தும் முனையங்கள் 6 உள்ளன. இவற் றில், 5 முனையங்கள் மட்டும் தற்போது செயல்பாட்டில் உள்ளன.
இத்துறைமுகம் தமிழ்நாட்டில் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியைக் கையாள்கிறது. நடப்பு நிதியாண்டில் இத்துறை முகம் 14.27 சதவீத சரக்குகளைக் கையாண்டு இரண்டாவது இடத் தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து, காமராஜர் துறைமுக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏற்றுமதி, இறக்குமதியில் நாட் டில் உள்ள 11 பெரிய துறைமுகங் கள் பெரும் பங்காற்றி வருகின்றன. ஒவ்வொரு நிதியாண்டிலும் துறை முகங்கள் எந்த அளவுக்கு சரக்கு களைக் கையாளுகின்றன என்பது குறித்து கணக்கெடுக்கப்படும். இதன்படி, நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் 14.27 சதவீதம் அளவுக்கு சரக்குகளை கையாண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துள் ளது. முதலிடத்தை மர்மகோவா துறைமுகம் பெற்றுள்ளது. அங்கு 19.89 சதவீத சரக்குகள் கையாளப் பட்டுள்ளன. கொல்கத்தா துறை முகம் 13.29 சதவீத சரக்குகளைக் கையாண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
எண்ணூர் துறைமுகம் இரும்புத் தாதுவைத் தவிர மற்ற சரக்குகளை அதிகளவில் கையாண்டு வருகிறது.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.