

கரூர் அருகே 4 மாணவிகள் சுனை நீரில் மூழ்கி பலியாகினர்.
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகமலை அருகேயுள்ள கழுகூரில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால், கழுகூர் மற்றும் அருகேயுள்ள உடையாப்பட்டியைச் சேர்ந்த மாணவிகள் 8 பேர் மற்றும் ஒரு மாணவர் என 9 பேர் நேற்று அப்பகுதியில் உள்ள மாரிபாறைப் பட்டி சுயம்பு பெருமாள் மலைக்கோயிலுக்கு சைக்கிளில் சென்றனர்.
அங்கு அவர்கள் கொண்டு சென்ற உணவைச் சாப்பிட்டு விட்டு கோயிலின் பின்பகுதியில் உள்ள சுனைக்கு கை கழுவச் சென்றனர். அப்போது, ஒருவர் தவறி சுனை நீரில் விழுந்துவிடவே ஒருவரைக் காப்பாற்ற மற்றொருவர் என அடுத்தடுத்து சந்தியா(13), சரோஜினிதேவி(13), பாண்டிமீனா(13), வனிதா(13) ஆகிய 4 பேரும் சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடினர்.
இதைக்கண்டு பயந்துபோன மற்ற மாணவிகள் கோயிலுக்கு கீழே ஓடிச் சென்று அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர். அப்பகுதி மக்கள் சுனைக்கு வந்து மாணவிகளைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் 4 பேரையும் சடலங்களாகவே மீட்க முடிந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஆட்சியர் ச.ஜெயந்தி, காவல் கண்காணிப்பாளர் கே.ஜோஷி நிர்மல்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மு.அருணா ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, இறந்த மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர்.
ஒரே பகுதியைச் சேர்ந்த 4 மாணவிகள் சுனை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தோகமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.