

சி2எச் நெட்வொர்க் பிரைவேட் நிறு வனத்தின் சார்பில் தணிகைவேல் மற்றும் நிர்வாகிகள், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி கண்ணம்மாளிடம் புகார் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழ் திரைப்பட இயக்குநர் சேரனின் சி2எச் நிறுவனம் (சினிமா டூ ஹோம்) மூலம், தமிழ் திரைப்படங்களின் உரிமம் பெற்று டிவிடிக்களை விநியோகம் செய்து வருகிறது.
இந்நிறுவனம் சார்பில் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படம் ஒரிஜினல் டிவிடிக்களாக கடந்த 7-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த டிவிடிக்களை உரிமம் இல்லாமல் திருட்டு டிவிடியாகவோ அல்லது உரிமம் இல்லாமல் கேபிள் டிவியில் ஒளிபரப்பவோ தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 9-ம் தேதி கிருஷ்ணகிரி அரசு கேபிள் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தனியார் உள்ளூர் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு, இப்படத்தை சட்ட விரோதமாக ஒளிபரப்பியுள்ளனர்.
தகுந்த உரிமம் பெறாமல் சட்ட விரோதமாக ஒளிபரப்பிய உள்ளூர் தனியார் சேனல் நிர்வாகம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். படம் ஒளிபரப்பான போது எடுக்கப்பட்ட சிடி நகலும் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.