

ஜெய்ப்பூர், புனே, தில்லி ,மும்பை ஆகிய தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் இயக்கத் தைச் சேர்ந்தவரை சிதம்பரம் அருகே பரங்கிபேட்டைப் பள்ளி வாசலில் வைத்து கடலூர் போலீஸார் வியாழக்கிழமை இரவு கைதுசெய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், மகாராஷ்டிரா மாநிலம் புனே, மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தால் நடத்தப் பட்ட தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக 5 பேரை தேசிய குற்றப்பிரிவு புலனாய்வு பிரிவு போலீஸார் தேடிவந்தனர். இவர்களில் ராஜஸ்தான் மாநில குற்றப்பிரிவு போலீஸார் 4 பேரை ஏற்கெனவே பிடித்தனர். இந்த கும்பலை சேர்ந்த அஷ்ரப் அலி(39) என்பவர் தலைமறைவானார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மோகராவை சேர்ந்த அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கு வந்து, அங்குள்ள பள்ளிவாசலில் தங்கியுள்ளார். தொடர்ந்து தனது இயக்கத்தினருடன் செல்போனில் பேசி வந்துள்ளார் அஷ்ரப்அலி (39). தொழுகையில் ஈடுபட்டு வந்துள்ளதால் இவர் மீது எவரும் சந்தேகப்படவில்லை.
ஜெய்ப்பூர் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டி ருந்த நிலையில், அஷ்ரப் அலி குறித்த தகவல் தெரிய வந்தது. இதையடுத்து ராஜஸ்தான் குற்றப்பிரிவு போலீ ஸார், டிஎஸ்பி குஷால்சிங் மற்றும் ஆய்வாளர் புஷ்பேந்தர்சிங் ரதோர் தலைமையில் ஒரு வாரத்திற்கு முன் தமிழகம் வந்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து அஷ்ரப்அலியின் செல்போன் எண்ணை தொடர்ந்து கண்காணித்த போது, அவரது எண் கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை செல்போன் கோபுரத்தை அடையாளம் காட்டியது.
இதைத்தொடர்ந்து, புதன் கிழமை கடலூர் வந்த ராஜஸ்தான் போலீஸார், கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஏ.ராதிகா உதவியுடன், சிதம்பரத்தை நெருங்கி வியாழக்கிழமை நள் ளிரவு அஷ்ரப்அலியை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்
கைதுசெய்யப்பட்ட தீவிரவாதி அஷ்ரப்அலியை பரங்கிப்பேட்டை யிலிருந்து கடலூர் தூக்கணாம் பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் வெள்ளிக்கிழமை காலை கடலூர் முதலாவது தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடுவர் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிபதி கிங்ஸ்லி, அஷ்ரப் அலியை 5 நாட்களுக்குள் ராஜஸ் தான் மாநிலம் ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அஷ்ரப் அலி ராஜஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உடனிருந்த 9 பேர்
தீவிரவாதி அஷ்ரப் அலிக்கு அடைக்கலம் கொடுத்து, அவருக்கு உறுதுணையாக இருந்த 9 பேரை யும் போலீஸார் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இவர்களிடம் கடலூர் மாவட்டப் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
சிக்கியது எப்படி?
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பள்ளிவாசலில் தீவிரவாதி அஷ்ரப் அலி இருப்பதை தெரிந்துகொண்ட சிதம்பரம் டிஎஸ்பி ராஜராமன், தனது தனிப்படை பிரிவினருடன் மாலை 4 மணிக்கு ஆப்ரேசனை துவக்கியுள்ளார். முதலில் போலீஸின் ஒற்றர் ஒருவரை அனுப்பி அவருடன் எத்தனை பேர் உள்ளனர், அவர்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் உள்ளதா என்பதை எல்லாம் அறியச் செய்து, அதன் பின் அஷ்ரப் அலியிடம் லாவகமாகப் பேசி, பள்ளி வாசலை விட்டு, தனியே அழைத்து வரச் செய்துள்ளார். அதன் பின் அரை மணி நேரத்தில் அஷ்ரப் அலியை சுற்றிவளைத்துள்ளனர் போலீஸார். சுற்றி வளைத்த போது, போலீஸார் பிடியிலிருந்து மீளவோ,அவர்கள் மீது எதிர் தாக்குதலோ எதுவும் அஷ்ரப் அலி நடத்தவில்லை.
வெளிமாநிலத்தவர்களை கணக்கெடுக்க முடிவு
தீவிரவாதி அஷ்ரப் அலி கைதானதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டக் காவல்துறை தனது கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி மசூதி மற்றும் கோயில்களை கண்காணிக்கவும், மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் பணிபுரியும் பங்களாதேஷ் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த வேலை யாட்கள் குறித்து முழு தகவல்களை பெற முடிவு செய்துள்ளனர்.
மேலும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிமாநில இளைஞர்கள், செங்கல் சூளை களில் உள்ள வெளி மாநிலத் தவர்களின் விபரத்தையும் சேகரிக்க முடிவு செய்துள்ளனர்.
கடலூர் காவல்துறை ஏமாந்ததா?
கடந்த ஒரு மாதமாக பரங்கிப் பேட்டையில் தங்கி, தீவிரவாதி அஷ்ரப் அலி குறித்து இணைய தளத்தில் புகைப்படத்துடன் குறிப்புகள் வெளியாகியிருந்த நிலையிலும் கடலூர் போலீஸார் அது குறித்து எதுவும் தெரியாத நிலையில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.