

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் 4 நாட்கள் மட்டும் நடைபெறுவது குறித்து திமுக தலைவர் கருணாநிதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுகவின் செயல்பாடுகள் பற்றி விவாதிப்பதற்காக அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை 4 நாட்கள் மட்டும் நடத்துவதாக அறிவித்துள்ளார்கள். அது எதற்காக என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
பிரச்சினை எழுப்புவோம்
நிதிநிலை அறிக்கையில் அரசின் வருவாயை உயர்த்து வதற்கான வழியைத் தெரி விக்கவில்லை. பேரவைக் கூட்டத் தொடரின் போது எங்கள் கட்சியின் சார்பில் எந்தெந்த பிரச்சினைகளை எழுப்புகிறோம் என்பதும், அதற்கு அரசு சார்பில் என்ன பதில் அளிக்கிறார்கள் என்பதும் தெரிய வரும்.
அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி இந்த அரசு இப்போது பதிலளிக்கவில்லை. எனினும் விரைவிலேயே இந்த அரசுக்கு இதற்கான பதிலை அளிக்க மக்கள் தயாராவார்கள். மாற்றுத்திறனாளிகளைப் பற்றி இந்த ஆட்சியினர் கவலைப்பட மாட்டார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.