Last Updated : 01 Mar, 2015 02:56 PM

 

Published : 01 Mar 2015 02:56 PM
Last Updated : 01 Mar 2015 02:56 PM

புதிய திட்டங்களால் கூடுதல் மின்சாரம்: கோடையை சமாளிக்க தயாராகும் மின்வாரியம்

தமிழகத்தில் வரும் கோடைக்காலத்தில் மின்தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், புதிய மின்திட்டங்கள் மூலம் அதனைச் சமாளிக்க மின்வாரியம் தயாராகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் கோடை காலத்தில் மின்வெட்டு நிலவி வருகிறது. கடந்த ஆண்டு கோடையில் சென்னையில் தினமும் இரண்டு மணி நேரமும், மற்ற பகுதிகளில் 4 மணி நேரமும் மின்வெட்டு இருந்தது. மின் உற்பத்தி அதிகரிப்பு, தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவது போன்றவற்றால் தற்போது வீடுகளுக்கு மின்வெட்டு தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வெயிலின் உக்கிரம் சற்று அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஒரு நாளில் 13,775 மெகாவாட் மின்தேவை ஏற்பட்டது. இந்த கோடையில் சராசரியாக நாளொன்றுக்கு 14,500 மெகாவாட் முதல் 15,000 மெகாவாட் மின்தேவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் மின்னுற்பத்தி 12,200 மெகாவாட்டாக (மின்வெட்டு அமல்படுத்தாமல்) இருந்தது.

மின் தேவையை சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த ஆண்டின் இறுதியிலிருந்தே தமிழகத்தில் மின்னுற்பத்தி அதிகரித்து வருகிறது. கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தின் முதல் அலகு செயல்படத் தொடங்கியபிறகு, தூத்துக்குடியில் 600 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட தனியார் ஆலை செயல்படத் தொடங்கியது. அதனால் மின் நிலைமை சற்று சீரடைந்தது.

தூத்துக்குடியில் தமிழக மின்வாரியமும், நெய்வேலி நிலக்கரி நிறுவனமும் இணைந்து கூட்டாக தலா 500 மெகாவாட் திறன் கொண்ட இரு அலகினை அமைத்துள்ளன. அதில், முதல் அலகு கடந்த 15-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியிருக்கிறது. இதில், தமிழகத்தின் பங்காக 200 மெகாவாட் மின்சாரம் தற்போது கிடைக்கிறது. இதுதவிர, இரண்டாவது அலகும் வரும் மார்ச் மாதத்தில் செயல்படத் தொடங்கும். அப்போது மொத்தம் 650 மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைக்கும்.

திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழக மின்வாரியமும் இணைந்து அமைத்துள்ள 500 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 3 அலகுகளில், மூன்றாவது அலகும் கடந்த சில தினங்களுக்கு முன்பு செயல்படத் தொடங்கிவிட்டது. அதன்மூலம் கூடுதலாக 375 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தலா 250 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட இரு விரிவாக்க அலகுகள் முடிவடைய உள்ளது. அதில், முதல் அலகு கடந்த 18-ம் தேதியில் இருந்து சோதனை மின்னுற்பத்தியை தொடங்கியிருக்கிறது. அடுத்த அலகும், மார்ச் மாதத்தில் இருந்து செயல்படத் தொடங்கும். இதனால் நமக்கும் 200 மெகாவாட் கூடுதலாகக் கிடைக்கும்.

மார்ச் இறுதி முதல் செயல்படவுள்ள கல்பாக்கம் விரைவு அணுப்பெருக்க ஈனுலை மூலம் 167 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதுதவிர காற்றாலை மின்சாரமும் கைகொடுக்கும். அதனால் கோடையை மின்வெட்டின்றி சமாளிக்க முடியும்.

மேலும், ஜூலை மாதத்தில் கூடங்குளம் அணுமின் திட்ட இரண்டாவது அலகும் செயல்படும். அதிலிருந்து தமிழகத்துக்கு 463 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அதனால் மின்நிலைமை சீரடையும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x