காட்டுத் தீயால் வனவிலங்குகள் இடம்பெயர்வு அதிகரிப்பு: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து

காட்டுத் தீயால் வனவிலங்குகள் இடம்பெயர்வு அதிகரிப்பு: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து
Updated on
2 min read

கொடைக்கானல் சரணாலயத்தில் காட்டுத் தீயால் வனவிலங்குகள், கேரளாவுக்கு இடம் பெயர்கின்றன. அந்த வன விலங்குகள் சுற்றுலாத் தலங்களுக்குள் நுழையும் வாய்ப்புள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் வனவிலங்குகள் சரணாலயத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, புள்ளிமான், காட்டெருமை, நரி, முள்ளம்பன்றி உள்ளிட்ட 33 அரியவகை வனவிலங்குகள் உள்ளன. கொடைக்கானலில் தற்போது வெயிலும், மழையும் மாறி மாறி வருகிறது. பகல் நேரத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் அடர்ந்த வனப்பகுதிகள் எளிதில் தீப்பற்றிக் கொள்கின்றன. வனத்துறை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து ஏற்படும் இடத்துக்கு செல்வதற்குள் சோலைக்காட்டு மரங்கள், வனத்துறையால் நடப்பட்ட மரங்கள், மூலிகைச் செடிகள் மற்றும் வனப்பகுதியையொட்டிய விவசாய பயிர்கள் எரிந்து நாசமடைகின்றன. மண்ணில் கண்ணுக்குத் தெரியாமல் வாழும் பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிரிகள் தீயால் இறந்து, பல்லுயிர் பெருக்கம் பாதிப்புக்குள்ளாகிறது.

நெருப்பு புகையால் அச்சமடையும் வனவிலங்குகள் கேரளாவுக்கு இடம்பெயர்கின்றன.

இதுகுறித்து கொடைக்கானல் சமூக ஆர்வலர் வீரா கூறியதாவது: கொடைக்கானல் சரணாலயத்தில் ஏற்படும் 75 சதவீதம் தீ விபத்துக்கு சுற்றுலாப் பயணிகள், 25 சதவீதம் இயற்கையாக நடக்கின்றன. குறிப்பாக, பெருமாள் மலையில் தொடங்கி, கீழ்மலை வழியாக அடிவாரம் வரை சமீப காலமாக அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகின்றன. தீயை அணைக்க நவீன கருவிகள், தண்ணீர் வசதி, போதுமான ஊழியர்கள் இல்லாததால் உடனடியாக தீயை அணைக்க முடிவதில்லை. கொடைக்கானல் வனப்பகுதியில் தற்போது தொடரும் தீ விபத்தால் உணவுச் சங்கிலி பாதிக்கப்பட்டு, வன விலங்குகள் இடம் பெயர்வு அதிகரிக்கிறது. இந்த வனவிலங்குகளில் ஒரு பகுதி கேரளா வனப்பகுதிக்கும், மற்ற விலங்குகள் கொடைக்கானல் நகர் பகுதியிலும் புகுந்து வருகின்றன. தீ விபத்தால் ஏற்படும் வெப்பத்தால், மென்மையான வனவிலங்குகள் இறக்கும் அபாயமும் உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு கீழ்மலை பகுதியில் 100 ஹெக்டேரில் வனப்பகுதி மரம், செடி, கொடிகள் அழிந்தன. அப்போது, ஏராளமான சிறுத்தை, காட்டு மாடுகள், முள்ளம்பன்றி, சாம்பார் மான்கள் கேரளாவுக்கு இடம்பெயர்ந்தன.

தற்போது அதுபோன்ற விபத்து ஏற்பட்டால் வனவிலங்குகள் சுற்றுலாத் தலங்களுக்குள் புகுந்து சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். கோடை சீசன் விறுவிறுப்பு அடைவதற்கு முன், வனத்துறை, தீயணைப்புத்துறை இணைந்து கொடைக்கானல் சரணாலயத்தில் தீ விபத்துகளை தடுக்கவும், வந்தால் மேலும் பரவாமல் அணைக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

முன்னாள் மாவட்ட உதவி அலுவலர் திண்டுக்கல் ராம்நகரைச் சேர்ந்த ஆர்.ஆர். ராஜசேகரன் கூறியதாவது: காடுகள் அழிவதற்கு முக்கியக் காரணம் நெருப்பு. வனப்பகுதியை ஒட்டிய பட்டா நிலங்களில் குவியும் குப்பைகளுக்கு தீ வைப்பதால், அந்த நெருப்பு காடுகளுக்கு பரவுகிறது. கொடைக்கானலுக்கு வரும் வடமாநில சுற்றுலாப் பயணிகள், சாலையோரங்களில் தீ மூட்டி சமைக்கின்றனர். அவர்கள் தீயை சரியாக அணைக்காமல் விட்டுச் செல்வதால் காடுகளில் தீப்பற்றுகிறது. வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள், வேடிக்கை பார்த்துக் கொண்டே சிகரெட் துண்டுகளை வனப்பகுதியில் வீசுகின்றனர். அதனால், கொடைக்கானல் அடிவாரம் வனத்துறை செக்-போஸ்ட்டிலேயே வாகனங்களை நிறுத்தி தீப்பெட்டி, எளிதில் தீப்பற்றும் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும். அவர்களுக்கு காடுகள் தீப்பற்றி எரிந்தால் ஏற்படும் விளைவுகளை பற்றி விழிப்புணர்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in