Published : 09 Mar 2015 07:13 PM
Last Updated : 09 Mar 2015 07:13 PM

நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மூன்று சாதனைப் பெண்கள்!

சாதனைப் பெண்களான கௌசல்யா, டாக்டர். சாய்லட்சுமி பலிஜப்பல்லி மற்றும் டாக்டர். நந்திதா கிருஷ்ணா ஆகியோர் 2014-ம் ஆண்டுக்கான நாரி சக்தி புரஸ்கார் விருதை பெற்று, தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இம்மூவருக்கும் விருதுகளை மகளிர் தினமான ஞாயிற்றுக்கிழமை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8, சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி மத்திய அரசு ஆறு தேசிய விருதுகளை வழங்குகிறது. பெண்களின் முயற்சி மற்றும் சிறந்த பங்களிப்புக்காக வழங்கப்படும் இந்த விருதுகளை ஸ்ரீ சக்தி புரஸ்கார் விருது என்று அழைக்கப்படுகிறது.

தேவி அகல்யா பாய் ஓல்கர், கண்ணகி, மாதா ஜிஜா பாய், கைதின்லியு சிலியாங், ராணி லட்சுமிபாய், ராணி ருத்ரம்மா தேவி ஆகியோர் பெயரில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு மேலும், குறிப்பிட்ட துறையில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்க அரசு முடிவு செய்தது. இவ்விருது வழங்கப்பட்ட எட்டு பெண்களில் மூவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

'பாசிட்டிவ்' பெண்மணி கௌசல்யா:

"பாசிட்டிவ் உமன் நெட்வர்க்" அமைப்பின் தலைவரான கௌசல்யா 1998-ல் இருந்து எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சேவை செய்து வருகிறார். இந்த சேவையை தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர் தனது கணவரை இழந்தார். அப்பொழுது தனது சொந்த அலுவலுக்காக ஓர் அரசு அலுவலகத்துக்கு சென்றிருந்த அவரை, அரசு அலுவலர் ஒருவர் பத்திரிகைக்கு பேட்டி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். கௌசல்யாவும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டி எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயன் உள்ளதாக அவர் உணர்ந்தார்.

இதைத் தொடர்ந்து அக்டோபர் 1998ல் "பாசிடிவ் உமன் நெட்வர்க்" அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இந்தியாவில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்களின் குரலாக இருக்கும். எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்கள் சுயமரியாதையுடன் சமமான வாழ்க்கைக்கான அதிகாரம் அளித்தல், பாகுபாட்டில் இருந்து விடுதலை ஆகியவை இந்த அமைப்பின் நோக்கமாகும்.

இந்த அமைப்பு நிறுவப்பட்டதில் இருந்து செயல்பாட்டு ஆய்வு, திறன் வளர்ச்சி, வாழ்வாதார சேவைகள் போன்ற உத்திகள் மூலம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மத்திய மாநில அரசுகள், ஐக்கிய நாடுகள் முகமைகள், தேசிய மற்றும் சர்வதேச அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து இந்த செயல்களை செய்துவருகின்றன. தற்போது இந்தியாவின் 13 மாநிலங்களில் 55 மாவட்டங்களில் மொத்தம் 30,000 பெண் உறுப்பினர்களை இந்த அமைப்பு கொண்டுள்ளது.

நந்திதா கிருஷ்ணாவின் சேவை:

நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்றுள்ள நந்திதா கிருஷ்ணா, வரலாற்று பண்டைய சுற்றுச்சூழல் நிபுணர் மற்றும் எழுத்தாளர். மும்பை பல்கலைக் கழகத்தில் பழங்கால இந்திய கலாச்சாரத்தில் இவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சி.பி. ராமசாமி ஐயர் அமைப்பும் அதன் பிற அமைப்புகளின் நிறுவனராகவும் இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறார்.

"சேக்ரட் பிளான்ட்ஸ் ஆப் இந்தியா", "மெட்ராஸ் தென், சென்னை நவ்" போன்ற பல்வேறு புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். இக்கோ நியூஸ், ஆசிரியராக அவர் பணிபுரிந்து வருகிறார். பல்வேறு மரியாதைக்குரிய தேசிய மற்றம் சர்வதேச விருதுகளை அவர் வென்றுள்ளார். சர் ஜே.சி. போஸ் நினைவு விருது, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் விருது, ஆசியாவின் சிறந்த பெண் (ஆசிய பெண்கள் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் விருது) போன்ற பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

"நாரி சக்தி புரஸ்கார் விருது வென்றது எனக்கு மிகுந்த பெறுமையை அளிக்கிறது. எங்கள் அமைப்பு மூலம் அதிகமான பெண்கள் பயன் அடைந்துள்ளனர். சேவையில் பெண்களையும் ஈடுபடுத்துகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கான பெண்களுக்கு கல்வி அளிக்கிறோம். கோட்டா பழங்குடியின பெண்களுக்கு குயவு கலைத் தொழில் கற்றுத் தருகிறோம். இருளர் மற்றும் குறும்பர் பழங்குடியின மக்களுடனும் நாங்கள் இணைந்து பணிபுரிந்து வருகிறோம்.

இந்தியாவில் பிரச்சனைகள் அதிகமாக உள்ளன. ஒருவர் எவ்வளவுதான் செய்தாலும் அது நிறைவாக இருப்பது இல்லை. இன்னும் கூடுதலாக செய்ய வேண்டியுள்ளது. ஒரு விஞ்ஞானியோ அல்லது பத்திரிக்கையாளரோ சமுதாயத்திற்காக செய்யவேண்டியது நிறையவே உள்ளது.

"பெண்கள் தங்களின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். "என்னால் முடியும்", "நம்மால் முடியும்" என்று அவர்கள் உணர வேண்டும். நாம் அனைவரும் சிறந்த மனைவியாகவும் தாயாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பது நன்றாகும். ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருளாதார சுதந்திரம் அவசியமாகும். ஒவ்வொரு பெண்ணும் சுயமாகச் செயல்படவும், பொருளாதார ரீதியில் சுதந்திரம் பெறும் வகையிலும் செயல்பட வேண்டும்" என்கிறார் நந்திதா.

கிராம சேவையை நோக்கமாகக் கொண்ட சாய்லட்சுமி பலிஜப்பள்ளி:

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நாரி சக்தி புரஸ்கார் விருதைப் பெற்ற ஏகம் நிறுவனத்தின் இயக்குனரும் நிறுவனருமான டாக்டர். சாய்லட்சுமி பலிஜப்பள்ளி, "நீங்கள் செல்லும் ஒவ்வொரு கிராமத்திலும் பெண்கள் கதாநாயகிகளாகவே இருக்கின்றனர். நாம் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகவே உள்ளோம் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு பெண்ணும் தன்னை நினைத்து பெருமையாக நினைக்க வேண்டும். இந்த விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். இது எனக்கு இன்னமும் பெரிய பொறுப்பை தந்துள்ளது" என்கிறார்.

குழந்தை நல மருத்துவரான இவர் தாய் சேய் இறப்பு விகிதத்தை குறைப்பதில் அரசு சாரா அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று நம்புகிறார். ஹைதராபாத்தில் தனது டாக்டர் படிப்பை முடித்தார். இவர் பொது சுகாதார மையத்தில் பயிற்சி பெற்றபோதும் தனியார் மருத்துவ மனையில் முதுநிலை படிப்பை பயிலும்போதும் இவருக்கு கிடைத்த அனுபவங்கள் இவர் எண்ணங்களில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. ஒற்றுமையில் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பொது சுகாதார முறைக்குத் தன்னை அர்பணித்துக் கொண்டார். இப்படிதான் ஏகம் அமைப்பு உருவாக்கப்பட்டது. சமஸ்கிருத மொழியில் ஏகம் என்றால் ஒன்று அல்லது ஒற்றுமை என்று பொருளாகும்.

தேசிய ஊரக சுகாதார மையம், தமிழ்நாடு சுகாதார முறைகள் திட்டம் பொது சுகாதார இயக்குனரகம் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள 1600 முதல் நிலை சுகாதார மையங்கள் போன்று பல்வேறு மையங்களுடன் ஏகம் இணைந்து செயல்பட்டு வருகிறது. தேசிய ஊரக சுகாதார இயக்கத்துடன் இணைந்து அரசுக்காக நாங்கள் 900 செவிலியர்களை வேலைக்கு எடுத்து, தரமான கவனத்தை அளிக்கும் வகையில் அவர்களுக்கு பயிற்சி தருகிறோம். இதற்கு முற்றிலும் அரசு நிதி உதவி அளிக்கிறது.

நிதி திரட்டுவதைத் தவிர பல்வேறு சவால்கள் இதில் உள்ளன. இதில் முக்கியமாக அனைவரையும் ஒன்று திரட்டுவதும், ஒவ்வொருவருக்கும் சமுதாயத்தில் பொறுப்புள்ளது என்பதை உணர்த்துவம் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இதுவரை அரசு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் 80,000 குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர். 1340 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மையங்களில் நடைப்பெற்ற குழந்தை நல முகாம்களில் 3,50,000 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது ஏகம் தமிழ்நாடு, சட்டீஸ்கர், உத்திரகாண்ட், மகாராஷ்டிரா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ளது. கேரள அரசும் எங்களை வரவேற்றுள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றடைவதே எங்களின் நோக்கமாகும் என்று சாய்லட்சுமி பலிஜபள்ளி தெரிவித்தார்.

படங்கள்:எஸ்.சுப்பிரமணியம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x