Published : 10 Mar 2015 04:41 PM
Last Updated : 10 Mar 2015 04:41 PM

மீனவர்களின் உண்மையான நண்பன் மோடி: தமிழிசை புகழாரம்

பல திட்டங்களை மீனவர்களுக்காகத் தீட்டிக் கொண்டிருக்கும் மோடி மீனவர்களின் உண்மையான நண்பனாகத் திகழ்கிறார் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இன்றைய சுஷ்மா ஸ்வராஜின் பயணமும், நாளைய மோடியின் பயணமும் தமிழக அரசியல்வாதிகளுக்குப் பாடம் புகட்டுவது போல் இருக்கிறது.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் சுடுவோம் என்று சொன்னதற்கு பதிலடியாக, நீங்கள் எங்கள் மீனவர்களை இப்படி சட்ட திட்டத்திற்கு உட்பட்டு பார்க்கக் கூடாது. மனிதாபிமானத்துடன் தான் அணுக வேண்டும் என்று இலங்கை மண்ணில் நின்று கொண்டே சுஷ்மா, ரணில் விக்கிரமசிங்கே முகத்தில் அறைந்தாற் போல் கேட்டார். அதற்கு இலங்கை பிரதமர் ரணில் மன்னிப்பு கேட்டார். இந்த தகவலை சுஷ்மா பாராளுமன்றத்தில் சொல்லியிருக்கிறார்.

இலங்கையில் உச்ச கட்ட போரில் நம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது கூட அதனை தடுத்து நிறுத்த குரல் கொடுக்காத மன்மோகன் சிங்கை கருணாநிதியும், வாசனும், இளங்கோவனும் கண்டிக்காதது ஏன்?

இலங்கைப் பிரச்சினையை அரசியல் லாபத்திற்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டு அவசியமாக நம் தமிழ் மக்களுக்கும், மீனவர்களுக்கும் விரைவில் கிடைக்கக் காத்திருக்கும் நல்ல தீர்வை தடுத்து விடாதீர்கள். டெல்லி வந்த இலங்கை எம்.பி.களிடம் 2 மணிநேரம் செலவழித்து மோடி உரையாடியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இப்படி நேரடி நிகழ்வும் , முயற்சியும் ஏதாவது நடந்ததா?

பிடிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 தமிழ் மீனவர்கள் இன்று மோடியால் விடுதலை பெற்றார்கள். இதுவே நம் தமிழர்களின் வாழ்வுக்கு ஒரு விடை கிடைக்கும் என்பதற்கு நம்பிக்கை ஒளி அல்லவா? மோடியின் இலங்கைப் பயணம் தமிழர் வாழ்வில் நிச்சயம் ஒளியேற்றும்.

மோடி மீனவர்களின் நண்பன்

மோடி பிரதமரான பிறகு எந்த மீனவரும் சுட்டுக் கொல்லப்படவில்லை. மீனவர்களின் பேச்சுவார்த்தை தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்றும், மோடி பயணத்திற்குப் பின்பு நிச்சயம் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் தெளிவாக கூறியிருக்கிறார்.

பல திட்டங்களை மீனவர்களுக்காகத் தீட்டிக் கொண்டிருக்கும் மோடி மீனவர்களின் உண்மையான நண்பனாகத் திகழ்கிறார் என்பதை மீனவச் சகோதரர்கள் அறிந்திருக்கிறார்கள்.

மோடிக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டுமே தவிர, பிழைப்பதற்காக அரசியல் பேசி அங்குள்ள தமிழர்களின் பிழைப்பைக் கெடுத்துவிடாதீர்கள்.

இலங்கை தமிழர்களின் வாழ்க்கை மேம்பாடு என்பதே நம் அனைவரின் ஒருமித்த கருத்தாக இருக்க வேண்டும். இதையும் அரசியலாக்கிக் கொண்டிருக்கும் தமிழக அரசியல்வாதிகளைக் கண்டு வருத்தம் அடைகிறேன்'' என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x