Published : 28 Mar 2014 08:20 AM
Last Updated : 28 Mar 2014 08:20 AM

வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்: செலவுக் கணக்கு பார்வையாளர்கள் வருகை

தமிழகம், புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.

தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 24-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது.

வாக்குப்பதிவு குறித்த முறைப்படியான அறிவிக்கை நாளை (சனிக்கிழமை) வெளியிடப்படு கிறது. இதைத்தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேரில் சென்றுதான் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இயலாவிட்டால், வேட்பாளருக்கு பதிலாக அவரை முன்மொழிபவர் மட்டும் சென்று மனுவை தாக்கல் செய்யலாம். அதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

சிறையில் இருப்பவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் போன்றோருக்கு இது உதவிகரமாக இருக்கும். அதே நேரம் இதற்கான விதிமுறைகளை தவறாது பின்பற்றவேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் செலவுக் கணக்குப் பார்வையாளர்கள் நாளை (29-ம் தேதி) வருகின்றனர். ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு இருவர் வீதம் தமிழகத்துக்கு 78 பேர் வருகின்றனர். அவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசிவிட்டு தொகுதிக்கு சென்றுவிடுவார்கள்.

ஸ்ரீபெரும்புதூர் உள்பட சில தொகுதிகளுக்கான பார்வை யாளர்கள் ஏற்கெனவே வந்துவிட்டனர். தொகுதிக்கு ஒருவர் என 39 பொதுப் பார்வையாளர்கள் ஏப்ரல் 5-ம் தேதி வருகின்றனர்.

வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 5-ம் தேதியுடன் நிறைவடைகிறது. மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதி நடக்கும். மனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் 9 கடைசி தேதி. வாக்குகள் மே 16-ம் தேதி எண்ணப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x