Published : 03 Mar 2015 09:50 AM
Last Updated : 03 Mar 2015 09:50 AM

மெட்ரோ ரயில் பணியின்போது சேதமான சாலைகள்: ரூ.3 கோடி செலவில் சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடக்கம் - போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும்

சென்னை கோயம்பேடு ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொண்டபோது சேதமான சாலைகளை சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ரூ.3 கோடி திட்டச் செலவில் மேற்கொள்ளப்படும் பணிகள் முடிவடைந்தவுடன் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் இருவழித் தடங்களில் 45 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 13 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிவடைந்து, சோதனை ரயில் ஓட்டமும் முடிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவது குறித்து பாதுகாப்பு ஆணையரக குழு அதிகாரிகள் விரைவில் வந்து ஆய்வு நடத்தவுள்ளனர். இம்மாத இறுதிக்குள் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.

இந்த வழித்தடத்தில் கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக்பில்லர், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக உள்வட்ட சாலையில் (100 அடி சாலை) தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனால், அந்த சாலை சேதமடைந்தது. மேலும், சில பகுதிகளில் வெறும் 5 மீட்டர் அகலத்தில் மட்டுமே சாலை இருந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது இந்த தடத்தில் பணிகள் முடிந்துள்ளன. எனவே சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோயம்பேடு ஆலந்தூர் மார்க்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்துள்ளன. எனவே, சாலையில் தோண்டப்பட்டுள்ள குழிகளை நிரப்பி, தடுப்புகளை அகற்றி சாலையை சீரமைக்கவுள்ளோம். ரூ.3 கோடி செலவில் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். இம்மாதம் இறுதிக்குள் பணிகளை முடிக்கவுள்ளோம். சாலைகளை சீரமைத்த பிறகு சாலையின் அகலம் பழைய நிலைக்கு (13 மீட்டர்) வந்துவிடும். அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் தடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x