

தோட்டக்கலைத் துறை சார்பாக வீடுகளில் காய்கறி தோட்டம் அமைத்திடவும், பெரும்பாலான மக்களை இதில் ஆர்வமுடன் ஈடுபடுத்திடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திட்டக் குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவர் ப.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம், வேளாண்மைத் துறை, சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை, கால்நடைப் பராமரிப்பு துறை, நெடுஞ்சாலைத் துறை, மாநில சமச்சீர் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகளில்
இந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் ஆட்சியர் விரிவாக கலந்தாலோசித்தார்.
பின்னர், கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: பள்ளி பாடப் புத்தகங்களை விரைவில் வழங்கிட வேண்டும். மாவட்டத்தில் பருவமழை குறைவாக இருந்தாலும் நெல் சாகுபடியை உயர்த்தி சிறந்த முறையில் பயிரிட ஊக்கம் அளித்து தொடர் நடவடிக்கைகளில் வேளாண்மை துறையினர் ஈடுபடுவதுடன், அரசு மானியத்தில் வழங்கப்படும் சோலார் மோட்டார்களை விவசாயிகளுக்கு வழங்கிடவும், உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்திடவும் வழிவகை செய்ய வேண்டும்.
சுகாதாரத் துறையில் கர்ப்பிணி பெண்களுக்கு முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி உரிய காலத்தில் வழங்கிடவும், தோட்டக்கலைத் துறை சார்பாக வீடுகளில் காய்கறி தோட்டம் அமைத்திடவும் பெரும்பாலான மக்களை இதில் ஆர்வமுடன் ஈடுபடுத்திட வேண்டும். அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் பொது மக்களிடம் சென்றடைய முனைப் புடன் செயல்பட வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி செயலர் ப.மைதிலி, மாவட்ட திட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.