Published : 25 Mar 2015 06:48 PM
Last Updated : 25 Mar 2015 06:48 PM

பள்ளிக் கல்வியில் தமிழகம் உச்ச நிலைக்கு செல்லும்: ஓபிஎஸ் நம்பிக்கை

2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு 20,936.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் தமிழகத்தை உச்ச நிலைக்கு நிச்சயமாகக் கொண்டு செல்லும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

2015-16-க்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பள்ளிக்கல்வி - உயர் கல்வி தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:

கடந்த நான்கு ஆண்டுகளில், 182 புதிய தொடக்கப் பள்ளிகளை துவக்கியும், 107 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தியும், 810 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தியும், 401 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தியும், அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்துள்ளது.

2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து தனியார் பள்ளிகளின் சேர்க்கையிலும், நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு 1,36,593 குழந்தைகள் இப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2010-2011 ஆம் ஆண்டில், முறையே தொடக்கநிலை மற்றும் உயர்நிலையில் 1 : 29 மற்றும் 1 : 35 ஆக இருந்த ஆசிரியர் மாணவர் விகிதம், 2014-2015 ஆம் ஆண்டு முறையே 1 : 25 மற்றும் 1 : 22 எனக் குறைந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களின் இடைநிற்றலைக் குறைப்பதற்காக சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 88.59 இலட்சம் மாணவ மாணவியர்களுக்கு 1,429.09 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக 381 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித் தனியாக 11,698 புதிய கழிப்பறைகள் 73.52 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. மேலும், பயன்படுத்தாமல் இருந்த 10,776 கழிப்பறைகள் 41.67 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளன. அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் அரசுப் பள்ளிகள் அனைத்திலும் மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதிகள் 100 சதவீதம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளில் 2,688.97 கோடி ரூபாய் செலவில், கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் சோதனைக் கூடங்கள், குடிநீர் வசதி, சுற்றுச் சுவர்கள் மற்றும் கழிப்பறைகள் போன்ற முக்கியக் கட்டமைப்பு வசதிகளை பள்ளிகளில் இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.

வரும் நிதியாண்டிலும், பல்வேறு நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தி, 450.96 கோடி ரூபாய் செலவில் பள்ளிக் கட்டமைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்படும்.

மாணவ மாணவியரின் நலனை மட்டுமே தொடர்ந்து கருத்தில் கொண்டு, அவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், 4 சீருடைத் தொகுப்புகள், புத்தகப்பைகள், காலணிகள், வடிவியல் பெட்டிகள், வரைபடப் புத்தகங்கள், க்ரேயான்கள், கலர் பென்சில்கள், கம்பளி ஆடைகள் போன்றவற்றை வழங்குவதற்காக, 2015-2016 ஆம் ஆண்டிற்கு 1,037.85 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

6.62 இலட்சம் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக 219.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக, 2011-2012 ஆம் ஆண்டில் 90.28 சதவீதமாக இருந்த உயர்நிலைக் கல்வி மொத்தச் சேர்க்கை விகிதம், 2013-2014 ஆம் ஆண்டில் 91.61 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேல்நிலைக் கல்வி மொத்தச் சேர்க்கை விகிதமும், 2013-2014 ஆம் ஆண்டில் 75.87 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரி அளவான 52.21 சதவீதத்தைவிட கணிசமான அளவு அதிகமாகும். அதேபோன்று, 2010-2011 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2014-2015 ஆம் ஆண்டில் மேல்நிலைக் கல்வி மொத்த சேர்க்கையில், ஆதிதிராவிட மாணவ மாணவியர் சேர்க்கையின் பங்கு 21.83 சதவீதத்திலிருந்து 24.07 சதவீதமாகவும், பழங்குடியின மாணவ மாணவியர் சேர்க்கையின் பங்கு 1.01 சதவீதத்திலிருந்து 1.03 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு 20,936.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு 2,090.09 கோடி ரூபாயும், தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத்திற்கு 816.19 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் தமிழகத்தை உச்ச நிலைக்கு நிச்சயமாகக் கொண்டு செல்லும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

உயர் கல்வி

புதிய, அரசு பொறியியல் கல்லூரிகளையும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் அமைப்பதற்கான இந்த அரசின் முயற்சிகளின் பயனாக, 2011-2012 ஆம் ஆண்டில் 6,13,164 ஆக இருந்த கல்லூரி இடங்கள், 2014-2015 ஆம் ஆண்டு 7,28,413 ஆக உயர்ந்துள்ளது.

இதுபோன்றே, பலவகை தொழில்நுட்ப கல்விப் பிரிவுகளில் உள்ள இடங்களும் இதே காலகட்டத்தில் 1,72,807–லிருந்து 2,15,652 ஆக உயர்ந்துள்ளன.

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைத் திருப்பி அளிக்கும் திட்டத்தின் கீழ், 2014-2015 ஆம் ஆண்டில் 2,82,948 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். 2015-2016 ஆம்ஆண்டிற்கு இத்திட்டத்திற்கு 569.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரசின் மேற்கூறிய ஒருங்கிணைந்த முயற்சிகளால், 2010-2011 ஆம் ஆண்டில் 6,51,807 ஆக இருந்த உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, 2014-2015 ஆம் ஆண்டு 7,66,393 ஆக உயர்ந்துள்ளது.

2014-2015 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு 153.55 கோடி ரூபாய் அளவிற்குக் கணிசமான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டிற்கு இப்பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவியாக 110.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, 2015-2016 ஆம் ஆண்டிற்கு மாநிலத்தில் உள்ள பிற பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவியாக 868.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x