

மணல் இரண்டாம் விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1440 கோடி இழப்பு ஏற்படுகிறது என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மணல் இரண்டாம் விற்பனையை தடை செய்ய வேண்டும். பொதுப் பணித் துறையினர் நேரடியாக மணல் குவாரிகளில் வரைவோலை பெற்றுக் கொண்டு மணல் வழங்கிட வேண்டும். குவாரி முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் கடந்த இரண்டு நாட்களாக திருச்சி மண்டல அளவில் வேலைநிறுத்தம் நடந்து வருகிறது.
இது தொடர்பாக நேற்று நாமக்கல்லில் சம்மேளன அவசரக் கூட்டம் நடந்தது. சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி தலைமை வகித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருச்சி மண்டலத்தில் இயங்கிவரும் அரசு மணல் குவாரிகளில் தினம் 10 ஆயிரம் லாரிகள் வெளியேறுகின்றன. ஆனால், 2,000 லாரிகள் மட்டும் வெளியேறுவதாக கணக்கு காண்பிக்கப்படுகிறது. இரண்டாம் விற்பனை நிலையம் அமைத்து மூன்று மடங்கு விலை வைத்து மணல் விற்பனை செய்யப் படுகிறது.
இதன்மூலம் அரசுக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.112 கோடி இழப்பு ஏற்படுகிறது. ஆண்டுக்கு ரூ.1440 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதுசம்பந்தமாக நீ்திமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன், திண்டுக்கல்லைச் சேர்ந்த ரத்தினம், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரெட்டி ஆகியோர் இதில் சம்பந்தப் பட்டுள்ளனர். இந்த முறைகேட்டை தடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது.
போராட்டத்தை சீர் குலைக்கும் வகையில் லாரிகள் இயங்குவதாக பொய்யான தகவல் அளிக்கப்படுகிறது. போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.
அரசு உத்தரவுப்படி இரண்டு யூனிட் மணல் ரூ.1,000-க்கும், மூன்று யூனிட் மணல் ரூ.1,500-க்கும் விற்பனை செய்ய வேண்டும். போராட்டத்தின் அடுத்த கட்டமாக மார்ச் 10-ம்தேதி (இன்று) ஈரோடு மாவட்டம், சோலாறில் அதிக லோடு ஏற்றி வரும் மணல் லாரிகளை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு கூறினார்.
அதிமுகவிலிருந்து திடீர் நீக்கம்
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி, மோகனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒருவந்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். மேலும், அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராகவும் இருந்தார். நேற்று அவர் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.