Last Updated : 09 Mar, 2015 10:30 AM

 

Published : 09 Mar 2015 10:30 AM
Last Updated : 09 Mar 2015 10:30 AM

தமிழக அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி வருவதில் திடீர் சிக்கல்: மின் உற்பத்தி பாதிக்க வாய்ப்பு

தமிழக மின்னுற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வருவது கடந்த ஒரு வாரமாகக் குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மின்நிலைமை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக மின்வாரியத்தால் நிறுவப்பட்டுள்ள அனல், புனல் உள்ளிட்ட மின்நிலையங்களின் மொத்த உற்பத்தித் திறன் சுமார் 12,000 மெகாவாட் ஆகும். இதில், அதிகபட்சமாக அனல் மின் நிலையங்களில் இருந்து சுமார் 4,770 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேநேரத்தில், புனல் மின்நிலையங்களில் இருந்து சுமார் 2,600 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர, மத்திய மின்னுற்பத்தி நிலையங்கள், மரபுசாரா எரிசக்தி, தனியாரிடமிருந்து கொள்முதல் ஆகியவற்றின் மூலம் இதர மின் தேவை சமாளிக்கப்படுகிறது.

அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை, ஒரிசா மாநிலத்தில் உள்ள டால்ச்சர், மற்றும் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் (இசிஎல்) ஆகிய நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து கொள் முதல் செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேற்கண்ட நிலக்கரிச் சுரங்கங் களில் இருந்து ஆண்டுக்கு 1.6 கோடி டன் நிலக்கரியை தமிழகம் கொள்முதல் செய்கிறது. இதன் மூலம் நமது 80 சதவீத தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. மீத முள்ள 20 சதவீதத் தேவைக்கான நிலக்கரி, இந்தோனேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

தற்போது, மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நிலக்கரி சப்ளை தட்டுப்பாடின்றி தேவைப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்துக்குத் தேவையான நிலக்கரி வருவது கடந்த சில நாள்களாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, மார்ச் 1-ம் தேதியில் இருந்து நிலக்கரி வருவது குறைந்

திருப்பதாக மின்வாரிய வட்டாரங்

கள் தெரிவித்தன. தமிழகத்துக்கு வரவேண்டிய நிலக்கரியில் 35 சதவீதம் மட்டுமே வந்திருப் பதாகவும், இதே நிலை நீடித்தால் மின்னுற்பத்தியில் பிரச்சினை ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மின்வாரியம் கருத்து

இது குறித்து மின்வாரிய உயரதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக ரயில் பெட்டிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு நிலக்கரி வருவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நமக்கு இன்னும் ஐந்து நாட்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் நிலைமை சீரடையாவிட்டால், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படும். அத்துடன் மேலும் இரண்டு சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை கொள்முதல் செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். அது கைகூடி னால் பிரச்சினை இருக்காது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x