Published : 23 Mar 2015 11:30 AM
Last Updated : 23 Mar 2015 11:30 AM

அதிமுக ஆட்சியில் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ததாக நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ததாக ஆதாரத்துடன் நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக்கூட்டத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த 10 இடைத் தேர்தல்களில் நாம்தான் வெற்றி பெற்றோம். இதில், இளையான்குடி, பர்கூர், கம்பம் உள்ளிட்ட 5 இடைத்தேர்தல்களை அதிமுக புறக்கணித்தது. ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு புதுக்கோட்டை இடைத்தேர்தலை மட்டுமே திமுக புறக்கணித்தது. ரங்கம் இடைத்தேர்தலில் திமுக தோற்றது. இருந்தாலும் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

அதிமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 110 விதியின்கீழ் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 500 கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் தற்போது குப்பைக்கூடையில் போடப்பட்டுள்ளன.

கடந்த 2011-ல் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில், தமிழ்நாட்டில் 4,640 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைத்துள்ளதாகவும், வரும் காலங்களில் 22 ஆயிரத்து 440 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்கள். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளதாக ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? அப்படி நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். இந்த சவாலை அமைச்சர்கள் அல்லது முதல்வர் ஏற்கத் தயாரா?

ராணிப்பேட்டை சிப்காட் விபத்து தொடர்பாக அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. தொழில் பாதுகாப்பை உறுதி செய்வது, கண்காணிப்பது அரசின் கடமை. தொழிற்சாலைகளை மூடியதால் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். இதைப்பற்றி அமைச்சருக்கு எந்தக் கவலையும் இல்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராக இருங்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x