

தமிழகத்தில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் ‘கிங் மேக்கர்’ என்று கருதப்பட்ட விஜயகாந்த், இதுவரை இல்லாத வகையில் தோல்வியை சந்தித்திருக்கிறார். இதற்குக் காரணம், அவர் கூட்டணி சூத்திரத்தை கையில் எடுத்ததுதான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
தேமுதிக 2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக தனித்துப் போட்டியிட்டு, விருத்தாசலத்தில் மட்டும் வெற்றி பெற்றது. 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டி யிட்டு ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும் அக்கட்சி 10 சதவீதம் வாக்குகளை எடுத்தது. 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29 தொகுதிகளை கைப்பற்றியது. அப்போதும் 10 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. அதே ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 10 சதவீதம் ஓட்டுகளைப் பெற்றது.
இந்நிலையில்தான், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் அதிமுக கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளுமே தேமுதிக-வை வளைத்துப்போட கடும் முயற்சிகள் மேற்கொண்டன. இதில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய அரசியலை கொண்டு வருவோம் என்று களம் இறங்கிய மூன்றாவது அணியான பாஜக அணி பக்கம் சாய்ந்தார் விஜயகாந்த். இதன் மூலம் அந்த அணி சுமார் 10 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அணி இரு தொகுதிகளை மட்டும் கைப்பற்றிய நிலையில், தேமுதிக ஒரு இடம்கூட வெற்றி பெறவில்லை.
ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டிருந்தால் அவரது கட்சி ஓரிரு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அல்லது பெறவில்லை என்றாலும் தனித்துப் போட்டியிட்டது என்கிற கவுரவமாவது கிடைத்திருக்கும். அது வரும் சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்துக்கு கை கொடுத்திருக்கும்.
தற்போதைய தோல்வி மூலம் தேமுதிக-வின் மக்கள் செல்வாக்கு சரிந்துவிட்டது என்றே கருதுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
ஏனெனில், கடந்த கால தேர்தல்களில் தொடர்ந்து சராசரியாக 10 சதவீதம் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொண்டு வந்த தேமுதிக அந்த வாக்கு சதவீதத்தை அக்கட்சி இழந்துவிட்டது என்கின்றனர் அவர்கள்.