Published : 11 Mar 2014 09:36 AM
Last Updated : 11 Mar 2014 09:36 AM

70 கோடி பேருக்காக அரசியல்: ராகுல் காந்தி பேச்சு

வறுமைக்கோட்டுக்கு மேலேயும் நடுத்தர வர்க்கத்துக்கு கீழேயும் வாழும் சுமார் 70 கோடி பேருக்காக காங்கிரஸ் அரசியல் நடத்த விரும்புகிறது என்று கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் ராகுல் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி ராஜஸ்தான் மாநிலம் டியோலி மாவட்டம் டோங்க் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மக்களை பொருளாதாரரீதியில் முன்னேற்றவே காங்கிரஸ் அரசியல் நடத்தி வருகிறது. வறுமையில் இருந்து மக்களை மீட்கவும் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகள் கிடைக்கச் செய்யவும் காங்கிரஸ் பாடுபட்டு வருகிறது. ஏழைகளை காங்கிரஸ் ஒருபோதும் மறந்தது இல்லை. நாடு முழுவதும் வறுமையில் வாடிய சுமார் 15 கோடி பேரை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீட்டெடுத்துள்ளது.

தற்போது வறுமைக் கோட்டுக்கு மேலேயும் நடுத்தர வர்க்கத்துக்கு கீழேயும் சுமார் 70 கோடி மக்கள் உள்ளனர். அவர்களை பொருளாதாரரீதியாக முன்னேற்ற, அவர்களுக்காக அரசியல் நடத்த காங்கிரஸ் விரும்புகிறது.

பாஜக மீது குற்றச்சாட்டு

பாஜக தலைவர்கள் செல்லும் இடமெல்லாம் ஊழல் குறித்துப் பேசுகிறார்கள் .ஆனால் கர்நாடகம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங் களில் பாஜக ஆட்சி நிர்வாகத்தில் நிலவிய ஊழல்கள் அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை.

ஊழலைப் பொறுத்தவரை ராஜஸ்தான் மாநில பாஜக அரசு முதலிடத்தில் உள்ளது. ஆட்சியாளர்களின் ஊழல் விவகாரங்களை காங்கிரஸ் அம்பலப்படுத்தும்.

கடந்த காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்திய இலவச மருந்துகள், ஓய்வூதியத் திட்டங்களை இப்போதைய பாஜக அரசு நிறுத்தியுள்ளது. பணக்காரர்களுக்காக மட்டுமே பாஜக ஆட்சி நடத்துகிறது.

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து மாநிலத்தில் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட சச்சின் பைலட் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டு ள்ளார்.

மக்களவை, சட்டமன்றம், பஞ்சாயத்து தேர்தல்களில் இளம் வேட்பாளர்களையே காங்கிரஸ் நிறுத்தும். அதன் மூலம் இளமையான திறமையான அரசை காங்கிரஸ் அமைக்கும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x