

திருமண பட்டுச் சேலைகளுக்காக கோ ஆப்டெக்ஸில் தனி ஷோரூம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங், இயக்குநர் கே.பிரகாஷ், கோ ஆப்டெக்ஸ் தலைவர் கே.வி.மனோகரன், மேலாண்மை இயக்குநர் சகாயம் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வரு மாறு:
தற்போது கோஆப்டெக்ஸில் பட்டுச் சேலை விற்பனை 4 சதவீதமாக இருக்கிறது. அதை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். கோ ஆப்டெக்ஸ் கடைகளை நவீனமயமாக்க வேண்டும். ஆடைகளின் வடிவமைப்பில் நவீன மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
ரூ. 500 கோடி வருவாய்
2013-14ம் நிதியாண்டில் ரூ.301 கோடியை கோ ஆப்டெக்ஸ் லாபமாக அடைந்துள்ளது. வரும் ஆண்டில் அதை ரூ.500 கோடியாக உயர்த்த வேண்டும்.
திருமணப் பட்டுச் சேலை களுக்கு தனி ஷோரூம்கள் அமைக்க வேண்டும். தற்போது கைத்தறி பருத்தி ஆடைகளை தனியார்தான் அதிகமாக ஏற்றுமதி செய்கின்றனர். கோ ஆப்டெக்ஸும் ஏற்றுமதித் துறையில் முன்னேற வேண்டும். அதிக ஆட்களை வேலைக்கு நியமிக்க வேண்டும். கோ ஆப்டெக்ஸ் ஆடைகள் பற்றி அதிக விளம்பரங்கள் செய்ய வேண்டும்.
மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும்
பட்டுச்சேலைகள், கூரைப்பட்டுச் சேலைகள், அரியலூர் சேலைகள், பழநி, கோவூர் சேலைகள், இயற்கை சாயத்தால் தயாரிக்கப்படும் துண்டு வகைகள் உள்ளிட்ட அனைத்தையும் மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு முடிவுகள் எடுக்கப் பட்டதாக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.