

திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காவேரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்கப்பட வேண்டும், கரும்புக்கும் நெல்லுக்கும் உரிய விலை கொடுக்க வேண்டும், முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்தீர்மானத்தில், "காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை இந்திய அரசு 20-2-2013 அன்று அரசு கெஜட்டில் வெளியிட்டது. இந்தத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் "காவேரி மேலாண்மை வாரியத்தையும் - காவேரி ஒழுங்கு முறைக் குழுவையும்" மத்திய அரசு 19-5-2013க்குள் அமைத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை இந்த அமைப்புகளை மத்திய அரசு அமைக்கவில்லை. எனவே, உடனடியாக மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு வலியுறுத்துகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.