Published : 23 Mar 2015 10:53 AM
Last Updated : 23 Mar 2015 10:53 AM

தமிழ் வளர்ச்சி கருத்தரங்கில் பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்பு

சங்கத் தமிழர் பண்பாடு மற்றும் தமிழ் வளர்ச்சிக்கு உலகளாவிய தேவை குறித்து சென்னையில் நடந்த 2 நாள் கருத்தரங்கில் பன்னாட்டு தமிழ் அமைப்பினர் உள்பட 200 பேர் பங்கேற்றனர்.

மதுரை உலக தமிழ்ச் சங்கம் சார்பில் சென்னையில் மார்ச் 20 மற்றும் 21 தேதிகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சங்கத் தமிழர் பண்பாடு மற்றும் தமிழ் வளர்ச்சிக்கு உலகளாவிய தேவை குறித்த விவாதம் நடந்தது.

முதல் நாள் கருத்தரங்கில் கட்டுரை தொகுப்புகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மூ.ராசாராம் வெளியிட்டார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிட்னி தமிழ் சங்க நிர்வாகி சந்திரிகா சுப்பிரமணியன், பிரான்ஸ் நாட்டு பேராசிரியர் சச்சிதானந்தம், சிங்கப்பூர் கிங் பல்கலைக்கழக பேராசிரியர் சுப.சின்னப்பன், நன்னியாங் பல்கலை பேராசிரியர் சீதாலட்சுமி மற்றும் ஹனீபா, மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

2-ம் நாளில் தமிழ் வளர்ச்சிக்கு உலகளாவிய தேவை குறித்த கருத்தரங்கம் நடந்தது. சங்க இலக்கியங்களில் மாந்தநேயம் என்ற தலைப்பில் பேராசிரியர் மருதநாயகம், சங்க தமிழனின் நீதிபண்பாடு என்ற தலைப்பில் சென்னை பல்கலை பேராசிரியர் மணிகண்டன், சங்க இலக்கியங்களில் கல்விசார் பண்பாடு என்ற தலைப்பில் பேராசிரியர் சச்சிதானந்தம், விருந்தோம்பல் பண்பாடு பற்றி மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியை ரேணுகாதேவி, சங்க தமிழரின் மனித அளவீடுகள் பற்றி பேராசிரியர் சின்னப்பன் உள்பட பலர் கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.

உலகத் தமிழ் அமைப்புகளின் எதிர்பார்ப்பு மற்றும் தேவை, அரசு எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. புதுடெல்லி தமிழ் அமைப்புகளின் தலைவர் கண்ணன், முத்தமிழ் சங்கத் தலைவர் முகுந்தன், ராகவன், வெளிநாட்டினர் உள்பட 200க்கும் அதிகமான தமிழ் அறிஞர்கள்,

அமைப்பினர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விஜயராகவன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் கா.மு.சேகர், மதுரை உலக தமிழ்ச் சங்க தனி அலுவலர் பசும்பொன் பங்கேற்றனர். விரைவில் மலேசியா, சிங்கப்பூரிலும் இதுபோன்ற கருத்தரங்கமும், மதுரையில் பன்னாட்டு திருக்குறள் மாநாட்டையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x