Published : 22 Mar 2015 11:36 am

Updated : 22 Mar 2015 11:37 am

 

Published : 22 Mar 2015 11:36 AM
Last Updated : 22 Mar 2015 11:37 AM

ராமானுஜர் தொலைக்காட்சி தொடருக்கு வசனம்: ஆன்மிகத்துக்கு என் பேனா தலைவணங்குகிறதா? - குட்டி பத்மினியிடம் கருணாநிதி சொன்ன விளக்கம்

மீடியா ஒர்க்ஸ் நிறுவனத் தின் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘ராமானுஜர்’ நெடுந்தொடர், கலைஞர் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்தத் தொடருக்கு திமுக தலைவர் கருணாநிதி வசனம் எழுதப் போகிறார் என்பதுதான் தற்போது சமூக வலைதளங்களில் படுவேக மாக பரவிக்கொண்டிருக்கும் செய்தி.

இதுகுறித்து வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் நிறுவனரும் ராமானுஜர் தொடரின் இயக்குநருமான குட்டி பத்மினியிடம் பேசியதிலிருந்து...


ராமானுஜர் கதைக்கு வசனம் எழுதுவதற்கு கருணாநிதி தயாரானது எப்படி நிகழ்ந்தது?

கலைஞர் தொலைக்காட்சிக்காக அடுத்து என்ன தொடர் செய்யப் போகிறீர்கள் என்று கருணாநிதி கேட்டிருந்தார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பலரும் ஏதேதோ கருத்துகளைக் கூறினர். மீண்டும் ஒரு மாமியார் - மருமகள் சண்டையைச் சொல்லும் தொடரை எடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அதேநேரத்தில் குடும்ப உறவுகளின் மேன்மைகளைச் சொல்லும் பல சீரியல்களை எடுத்தாகிவிட்டது. அதே பாணியில் பலர் கூறிய யோசனைகளை தட்டிக் கழித்தேன்.

‘அடிப்படையில் நான் இறை நம்பிக்கை உள்ளவள். மத்வாச்சாரியார், ராமானுஜர், ராகவேந்திரர் போன்ற மகான் களின் தத்துவங்கள் எனக்குப் பிடிக்கும். 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்படிப்பட்ட மகான்களில் ஒருவரைப் பற்றி தொடரை எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது. ஆனால், அதற்கு நீங்கள் சம்மதிக்க மாட்டீர்களே’ என்று கருணாநிதியிடம் கூறினேன்.

அதைக் கேட்ட அவர், ‘‘யார் சொன்னது, சம்மதிக்க மாட்டேன் என்று? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சாதி, மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த ராமானுஜரைப் பற்றிய தொடரை எடுங்கள். ஆனால், ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றில் உள்ளது உள்ளபடியே எடுங்கள். எடுத்ததற் கெல்லாம் மேல் உலகத்தைக் காட்டாதீர்கள்’’ என்றார் சிரித்தபடி.

இப்படிச் சொன்னதோடு நிறுத்திக் கொள்ள வில்லை. மறுநாள் என்னைக் கூப்பிட்டு அவரிடமிருந்த ராமானுஜர் குறித்த 15-க்கும் மேற்பட்ட நூல்களைக் கொடுத்தார்.

கருணாநிதிக்கு ராமானுஜர் மீது என்ன திடீரென்று பக்தி ஏற்பட்டுவிட்டது என்று பலரும் உங்களிடம் கேள்வி எழுப்புவார்களே?

இதற்கான பதிலை அவரே தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

என் கொள்கை உறுதியை யாரும் ஐயுறத் தேவையில்லை. ஆமாம், உண்மைதான்.

‘முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ் நாடுதன் அருந்தவப் பயனாய்
இராமா னுசனை ஈன்றதன்றோ?
இந்நாடு வடகலை ஏன் என எண்ணித்
தென்கலை ஈன்று திகழ்ந்த தன்றோ?’

- என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனே, 1946-ம் ஆண்டு திருச்சி வானொலிக் கவியரங்கில் ராமானுஜரை பாராட்டிப் பாடியுள்ளார். இதில் கொள்கை மாறுபாடு எதுவுமில்லை. ஒருவரைப் பாராட்டுவதா லேயே அவருடைய அனைத்துக் கொள்கை களையும் ஏற்றுக் கொண்டு விட்டதாக பொருள் கொள்ளக் கூடாது. குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார், மதுரை ஆதீனம் எல்லாம் சிறந்த ஆன்மிகவாதிகள் என்றபோதிலும், அவர்களுடைய தமிழுக்கா கவும் சாதி, மதப் புரட்சிகளுக்காகவும் ஆதரிக் கவே செய்தோம். குன்றக்குடி அடிகளாரை மேலவை உறுப்பினராகவே நியமித்தோம். கிருபானந்த வாரியாரை எதிர்த்து திருவாரூர் கோயிலிலே கேள்வி கேட்ட நானே, அவருடைய திருவுருவச் சிலையை சேலத்தில் திறந்துவைத்தேன். எனவே, ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு என்றதும் எதையெதையோ எண்ணி யாரும் குழப்பம் அடையத் தேவையில்லை என்று தனது முகநூல் பக்கத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.

இந்தத் தொடரை இயக்கப் போவது யார்?

ரோமாபுரி பாண்டியன் தொடரை இயக்கும் தனுஷ்தான் எபிசோட் இயக்குநர். நான் தொடரின் இயக்குநர்.

விசிஷ்டாத்வைதத்தை உலகுக்கு அளித்த ராமானுஜரின் ஆன்மிக இறை அனுபவங்களை எழுதுவதற்கு கருணாநிதியின் பேனா தலைவணங்குமா?

இப்படி ஒரு கேள்வியை எல்லோரும் கேட்கிறார்கள் என்று கருணாநிதியிடம் கூறினேன். அதைக் கேட்டு சிரித்த அவர், ‘என் பேனா தலைவணங்கி இருக்கிறதா என்பதை தொடரைப் பார்த்துவிட்டு மக்களே முடிவு செய்யட்டும்’ என்றார்.

இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.


ராமனுஜர் தொலைக்காட்சி தொடர்ஆன்மிகம்என் பேனா தலைவணங்குகிறதாகுட்டி பத்மினிகருணாநிதி சொன்ன விளக்கம்

You May Like

More From This Category

More From this Author