Published : 24 Mar 2015 01:39 PM
Last Updated : 24 Mar 2015 01:39 PM

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு பாதுகாப்பு: அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் ஐஏஎஸ். அதிகாரி சகாயம் மற்றும் அவரது குடும்பத்தினரின் உயிருக்கும் உடமைக்கும் தமிழக அரசு நிரந்தர பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், "மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக சகாயம் பணியாற்றிய போது, கிரானைட்டு முறைகேடுகளை அம்பலப்படுத்தினார். பின்னர் அவர் கோ.ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக பணியமர்த்தப்பட்டார்.

நீதிமன்ற உத்திரவின் படி கிரானைட் முறைகேட்டை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டு அப்பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவரையும் குடும்பத்தாரையும் அச்சுறுத்தும் வண்ணம் கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

அவரை கூலிப்படையை வைத்து கொலை செய்திட திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்குள் நடத்திய உரையாடல் குறித்த, தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து சகாயம் கடந்த 2013 மார்ச் 22-ல் தமிழ்நாடு தலைமைச் செயலாளரை சந்தித்து முறையிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புகார் தெரிவித்த போதும், புகாரின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டு பிடிக்க முயற்சிக்காது இருப்பது வியப்பாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

அண்மை காலத்தில் நேர்மையான அதிகாரிகள் பணியாற்றிட இயலாது என்ற நிலை உருவாகியுள்ளது. நேர்மையான அதிகாரிகளை ஊக்குவிப்பதும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதும் அரசின் தலையாக கடமையாகும்.

இனியும் காலம் தாழ்த்தாது நேர்மையான அதிகாரியான சகாயம் மேற்கொண்டுள்ள பணிகளுக்கு குந்தகம் விளைவிக்காமல், அவரது கடமையை நிறைவேற்றிட முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

அவரை அச்சுறுத்துவோரை கண்டறிந்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு கைது செய்திட வேண்டும். சகாயம் மற்றும் அவரது குடும்பத்தினரின் உயிருக்கும் உடமைக்கும் நிரந்தர பாதுகாப்பு வழங்கிட வேண்டுமாய் தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x