

திருவள்ளூர் தொகுதியில் நோட்டாவுக்கு கிடைத்த கணிசமான வாக்கு, அரசியல் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து வருவதன் குறியீடாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட வேணுகோபால் 6,28,499 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் பெற்றுள்ளார். இவருக்கு 3,05,069 ஓட்டுக்கள் கிடைத்தன. தேமுதிக வேட்பாளர் யுவராஜ் 2,04,734 ஓட்டுக்களைப் பெற்று 3 -வது இடத்தையும், காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் 43,960 ஓட்டுக்களைப் பெற்று 4-வது இடத்தையும் பிடித்தனர்.
இந்நிலையில், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதற்கான நோட்டா 23,598 வாக்குகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் நோட்டாவுக்கு 23, 598 ஓட்டுக்கள் கிடைத்துள்ளதை அலட்சியப்படுத்திவிட்டு நகர முடியாது. அரசியல் கட்சிகள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையானது படிப்படியாக குறைந்து வருவதற்கான அறிகுறியாகவே இது அமைந்துள்ளது. நாட்டின் பிரதான கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகளை விட குறைவாக கிடைத்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவை ஓர் எச்சரிக்கையாகவே எடுத்துக்கொண்டு, அரசியல் கட்சியினர் மக்கள் மனதில் இடம் பிடிக்கின்ற வகையில் தங்களின் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்’’ என்கின்றனர்.
மேலும், திருவள்ளூர் நாடாளு மன்றத் தொகுதியில் 614 தபால் ஓட்டுக்கள் பதிவாயின. இதில், அரசு ஊழியர்கள் 13 ஏ விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்யாமல் போட்ட 286 ஓட்டுக்கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.