

தமிழகத்தில் இரு வாக்குச் சாவடிகளில் திடீரென மறுதேர்தல் நடத்தப்படுவது ஏன் என்பதற்கு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் வியாழக் கிழமை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலின் போது கடைசி இரு நாள்களில் ரூ.55 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பான புகார்களில் ஒரு அரசியல் கட்சியின் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அது பற்றி நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவில் விளக்கமான தகவல் அளிக்கப்பட்டிருந்தது.
சேலம் மற்றும் நாமக்கல் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் சனிக்கிழமை மறுவாக்குப்பதிவு நடக்கிறது. இந்த நடவடிக்கையை எடுத்தது மத்திய தேர்தல் ஆணையம்தான். தமிழக அளவில் நாங்கள் முடிவெடுக்கவில்லை.
அங்கு வாக்குப்பதிவு இயந்தி ரங்களில் “ஃபேக்ட் எரர்” எனக் காட்டியது. அப்படியிருந்தாலும் அதில் பதிவான வாக்குகளை எடுத்துவிடலாம். எனினும் இது பற்றி மத்திய தேர்தல் ஆணையத்துக்குத் தகவல் தெரிவித்திருந்தோம். சில அரசியல் கட்சியினரும் தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவித்திருந்தனராம். அதனால் தான் அங்கு மறுதேர்தல் நடத்து வதற்கு ஆணையம் உத்தர விட்டது.
வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான ஊழியர்களை விட கூடுதலாக 20 சதவீதம் ஊழியர்கள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எந்தெந்த தொகுதிக்கு அவர்களை அனுப்புவது என்பது பற்றி ஒரு நாளுக்கு முன்பு குலுக்கல் நடத்தி முடிவு செய்யப்படும். அதுபோல், எந்தெந்த மேசையில் அவர்களை அமரவைப்பது என்பது வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 5 மணிக்கு குலுக்கல் மூலம் இறுதி செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்படும்.
தபால் வாக்குகள் 16-ம் தேதி காலை 8 மணிக்கு முன்பு வரை பெறப்படும். இதுவரை பெறப்பட்ட தபால் வாக்குகளில் 30 சதவீத வாக்குகள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப் பட்டுள்ளன. இவ்வாறு பிரவீண் குமார் கூறினார்.