

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த புதிய பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பார்ம் டிக்கெட் ரூ.5-ஆக உள்ளது. உறவினர்கள், நண்பர்களை வழி அனுப்பவும் மற்றும் அவர்களை அழைத்து வரவும் ரயில் நிலையத்துக்குள் செல்பவர்கள் ரூ.5 கட்டணமாக செலுத்தி பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்கின்றனர்.
இந்நிலையில் ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை ரூ.5-ல் இருந்து ரூ.10-ஆக உயர்த்த மத்திய ரயில்வே துறை அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி இந்த புதிய பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம், நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் ஏப்ரல் 1-ம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வருகிறது.
அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் திருத்தப்பட்ட பிளாட்பார்ம் டிக்கெட்டை அச்சிட்டு, ரயில் நிலையங்களுக்கும் சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்யக்கோரி அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
புதிய டிக்கெட்டுகள் அச்சிடப்படும் வரை ஏற்கனவே திருத்தப்பட்ட முத்திரையுடன் உள்ள டிக்கெட்களை பயன்படுத்தலாம். பண்டிகை மற்றும் திருவிழாக் காலங்களில் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்த பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை மேலும் உயர்த்திக் கொள்ள, அந்தந்த ரயில்வே மண்டல மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.